ஆடூ மகடூ என்ற சொற்கள்

ஆடூ மகடூ என்பன முறையே உயர்திணை ஆண்பால் – பெண்பால் –
ஒருமைப்பெயர்களாம். இவை ஊகார ஈற்றுச் சொற்கள். இவை வருமொழியோடு
இணையுங்கால் இடையே எழுத்துப் பேறாகிய உகரம் பெறுதலுமுண்டு என்பர் உரை
யாசிரியன்மார்.
எ-டு : ஆடூஉக் குறியன், மகடூஉக் குறியள் -அல்வழிப் புணர்ச்சி;
ஆடூஉக்கை, மகடூஉக்கை – வேற்றுமைப் புணர்ச்சி (தொ. எ. 267 நச்).
இவை வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இன்சாரியை பெறுதலு முண்டு என்பர்
தொல்காப்பியனார். ஆடூஉவின்கை, மகடூஉவின் கை என வரும். (தொ.எ. 271
நச்.)
பொதுவாகத் தொல்காப்பியனார் உயர்திணைப் பெயர் களுக்கு இன்சாரியை
விதித்தாரல்லர். ஆடூ, மகடூ என்ற பெயர்களுக்கு இன்சாரியை
அமையாதாயினும், அவை சொல்லால் அஃறிணை போறலின் இன்சாரியை வருதல்
குற்றமில்லை எனப்பட்டது. (எ. ஆ. பக். 144).