ஆடானை

திருவாடானை என்று வழங்கப்படும் இவ்வூர் பாண்டிய நாட்டைச் சார்ந்து இராமநாதபுர மாவட்டத்தில் அமைகிறது. வருணனின் புதல்வர் துருவாச முனிவரை அவமதித்தமையின் ஆட்டுத் தலையும், யானை உடலும் அடையும்படி அவர் இட்ட சாபம் இத்தலத்தில் தீர்ந்தது. இறைவனுக்கு இதனால் ஆடானை நாதர் என்று பெயர். என்ற புராணக் கதை நம்பிக்கையில் இவ்வூர்ப் பெயர் எழுந்துள்ளது என்ற எண்ணம் முதலில் இறைப் பெயராக அமைந்த இப்பெயரை மக்கள் இவ்வூருக்கு வழங்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. ( பதி 248 )