தொல்காப்பியனார் விரிவஞ்சி ஒருமொழியிலக்கணம் கூறா ராயினார்.
பாணினியார் எட்டு அத்தியாயத்துள் விகுதிமாத்தி ரைக்கே மூன்று
அத்தியாயம் கூறி, விகுதிப்புணர்ச்சிக்கண் படும் செய்கை முதலியனவும்
வேறு கூறினார். அவற்றுள்ளும் அடங்காது எஞ்சி நின்ற சொற்களைப்
பின்னுள்ளோர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாகவே புணர்த்துச்
செய்கைசெய்து முடித்தனர்.
“இந்திரனுக்குப் பிரகற்பதி ‘இவை வழு, இவை வழுஇல்லன’ என வடசொற்களைத்
தனித்தனி எடுத்து ஓதலுற்றார்க்குத் தெய்வ யாண்டில் ஆயிரம் சென்றது;
சென்றும் சொற்கள் முடிந்தில” என்பது மாபாடியத்துள் கண்டது. தமிழ்மொழி
யும் அவ்வாறு பெருகிக் கிடத்தலின் எடுத்தோதப் புகின் முடிவு பெறாது
ஆதலின், சிலவற்றை எடுத்தோத்தானும் சிலவற்றை இலேசானும், சிலவற்றைப்
புறனடையானும் சிலவற்றை உத்திவகையானும் உணர்ந்து கொள்ளுமாறு தொகுத்துத்
தொல்காப்பியனார் நூல் செய்தார்.
நன்னூலார் பதவியலில் ஒருமொழியிலக்கணம் கூறினார்.
ஆயின், தொல்காப்பியனரால் புணர்க்கப்படாத சொற்களைப் பின்னுள்ளோர்
பிரித்து முடித்தல் முதல்நூலொடு மாறு கொளக் கூறலாம் என்பர்
நச்சினார்க்கினியர். (தொ. எ. 482 உரை)
‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் சிதைவுக்கு
எடுத்துக்காட்டுப் பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடல்
என்பர் பேராசிரியர். (தொ. பொ. 663 உரை)