ஆசிரியம், வெண்பா இவற்றில் வரும்இயற்சீர்கள்

உரியசைகளாகிய நேர்பு நிரைபு என்ற இரண்டன் பின்னும் நேரசை நிற்பின்இயற்சீரின்பாற்படும். படவே நேர்பு நேர், நிரைபு நேர் என்பன இயற்சீரின்பாற்படுவனவாம். இவற்றின் வாய்பாடுகள் போதுபூ விறகுதீ என்பன.நேர் நிரை என்ற இயலசை இரண்டன் பின்னும் நேர்பு, நிரைபு என்ற உரியசைவரின் அவற்றானும் நேர் நேர்பு, நேர் நிரைபு, நிரை நேர்பு நிரை நிரைபுஎன்ற நான்கு சீர்கள் தோன்றும். இவற்றின் வாய்பாடுகள் முறையே போரேறு,பூமருது, கடியாறு, மழகளிறு என்பன.இவ்வாற்றான், உரியசையும் இயலசையும், இயலசையும் உரியசையும் என இவைமயங்கிய இயற்சீர் ஆறாம்.நேர், நிரை என்ற இயலசை தம்மொடு தாமும், தம்மொடு பிறவும்மயங்குகையில் நேர்நேர், நிரை நிரை, நேர் நிரை, நிரை நேர் என மயங்கி,முறையே தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்ற வாய்பாடுகளான்வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரிஎனவும் வழங்கப்பெறும். (தொ. செய். 13, 15, 16 பேரா. நச்.)இவ்வாற்றான் இயலசையால் வரும் இயற்சீர் நான்காம். இப்பத்துஇயற்சீர்களும், ஆசிரியம் வெண்பா இவற்றில் வருவன.