ஆசிரியத்துள் இயற்சீர் வெள்ளடிவருதல்

இயற்சீர் வெள்ளடியையுடைய அடி முழுஅடியாக ஆசிரியப் பாவின்கண் இடம்பெறும்.எ-டு : ‘எறும்பி அளையிற் குறும்பல் சுனையஉலைக்கல் அன்ன பாறை ஏறிக்கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்’ (குறுந். 12)என இயற்சீரானாகிய வெள்ளடி இவ்வாசிரியத்துள் முதலடி யாக முழுமையின்வந்தது.‘கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்தபுகர்முக யானை நுதல்மீ தழுத்தியசெங்கோற் கருங்கணை போலும் எனாஅதுநெஞ்சம் கவர்ந்தோள் நிரையிதழ்க் கண்ணே’என இவ்வாசிரியப்பா முழுதும் இயற்சீர் வெள்ளடி வந்ததெனக் கொண்டுஇதன்கண் அகவலோசை பிறக்கும் எனக் கொள்ளின், இயற்சீர் வெண்டளையான் வரும்கட்டளை வெண்பா இலதாகிவிடும். (தொ.செய். 62 நச்.)