ஆசிரியத்தளை

இயற்சீர் நான்கனுள் நேர் ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின்நேரசையோடு ஒன்றின் சிறப்புடைய நேரொன் றாசிரியத் தளை. நேர்ஈறு வருமொழிமூவசைச் சீரின் முதலில் உள்ள நேரசையோடு ஒன்றின் சிறப்பில்லாத நேரொன்றாசிரியத்தளை. நிரை ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின் முதலில் உள்ளநிரையசையோடு ஒன்றின் சிறப்புடைய நிரையொன்றாசிரியத்தளை. நிரைஈறுஇரண்டும் வருமொழி மூவசைச் சீரின் முதலில் உள்ள நிரையசையோடு ஒன்றின்சிறப்பில்லா நிரை ஒன்றாசிரியத்தளை.எ-டு : ‘ உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை ’ (ஐங். தனிப்.)‘ திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி’ (புறநா. 2)‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின் ’ (மலைபடு. 1)‘ ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்’ (முதுமொழி. 1)என முறையே காண்க. (யா. க. 19 உரை)