ஒரு பொருளின் பெயர் அதனொடு பிரிக்கக்கூடிய தொடர்போ,பிரிக்கமுடியாத தொடர்போ உடைய பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம்.அது ‘தத்தம் பொருள்வயின் தம்மொடுசிவணும்’ தற்கிழமை ஆகுபெயர், ‘ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டும்’ பிறிதின்கிழமை ஆகுபெயர் – என இரு வகைத்து. ஆகுபெயர், முதலிற்கூறும் சினைஅறி கிளவி – சினையிற் கூறும் முதல் அறிகிளவி – பிறந்தவழிக்கூறல் – பண்புகொள் பெயர் – இயன்றது மொழிதல் – இருபெயரொட்டு -வினைமுதல் உரைக்கும் கிளவி – அளவுப்பெயர் – நிறைப்பெயர் – முதலியனபற்றி வரும். இவையேயன்றிக் கருவிஆகுபெயர், உவமஆகுபெயர்,தொழில்ஆகுபெயர், காரணஆகுபெயர், வரையறைப் பண்புப்பெயர் ஆகுபெயர்,காரியஆகுபெயர், ஈறு திரிந்த ஆகுபெயர் – முதலாகப் பலவாறாக வருதலுமுண்டு. (தொ. சொ. 115 – 119 நச். உரை)யாதானும் ஒரு பொருத்தத்தினான் ஒன்றன்பெயர் ஒன்றதாக வருவது. வருமாறு: ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப்பொருளை முதலான் கூறும்பெயர்ச்சொல்; கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயர்ஆயிற்று.‘சினையிற் கூறும் முதலறி கிளவி’ யாவது முதற்பொருளைச் சினையான்கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது. நடப் படுவது பூவினது முதல்ஆதலின் அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெயர் ஆயிற்று.‘பிறந்தவழிக் கூறல்’ என்பது இடத்து நிகழ் பொருளை இடத்தான் கூறுதல்.வேளாகாணி என்பது, வேளாகாணியிற் பிறந்த ஆடையைக் குறித்தது. யாழ்கேட்டான் என்புழி, யாழிற் பிறந்த ஓசையையும் யாழ் என்றமையால்,பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயராம்.‘பண்புகொள் பெயர்’ ஆவது பண்பின் பெயரால் பண்புடை யதனைக் கூறல்.நீலம் என்பது அந்நிறத்தையுடைய மணியைக் குறிப்பது இது.‘இயன்றது மொழிதல்’ ஆவது இயன்றதனான் மொழிதல், இயன்றதனை மொழிதல் எனவிரியும். காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதலும், காரணப் பொருளைக்காரியத்தான் மொழிதலும் இவ்வாகுபெயராம். பொன் பூண்டாள் எனவும், இஃதோர்அம்பு – இஃதோர் வேல் என வும் வருமிடத்து, ‘பொன்’ பொன்னினான் ஆகியஅணிகலத் தையும் ‘அம்பு’ ‘வேல்’ என்பன அவை உடம்பிற்பட்ட வடு வையும் இவ்ஆகுபெயரான் உணர்த்தின. நெல்லாதல் காண மாதல் ஒருவன் கொடுப்பக்கொண்டவன், ‘இன்றைக்குச் சோறு பெற்றேன்’ என்பான். அவ்வழிச்சோற்றுக்குக் காரண மாகிய நெல்லும் காணமும் சோறு என இவ்ஆகுபெயரான்சொல்லப்பட்டன.‘இருபெயரொட்டு’ என்பது இரண்டு பெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டுமற்றொரு பொருள் தரு பெயராகி வருவது. துடியிடை என்பது துடிபோன்றஇடையினையுடை யாளைக் குறிப்பது இவ்வாகுபெயராம்.‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ என்பது வினையும் முதலும் உரைக்கும்கிளவி என உம்மைத்தொகையாகக் கொள்ளப் படும். படவே, வினையான் உரைக்கும்கிளவியும் வினைமுத லான் உரைக்கும் கிளவியும் ஆகுபெயர் என்றவாறு.எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும் சொல்லப்பட்ட தனையும்அப்பெயரான் வழங்குதலின் வினையான் உரைக்கப் பட்ட ஆகுபெயராம்; சாலியனான்நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது வினைமுதலான் உரைக்கப் பட்டஆகுபெயராம்.தாழ்குழல் என்பது, அதனையுடையாட்கு ஆகி வந்தது, ஈண்டு, குழல் ‘தாழ்’என்னும் அடையடுத்து வந்தவாறு – அடை யடுத்து வந்த ஆகுபெயர். (தொ. சொ.111 தெய். உரை)பொருளே இடமே காலமே சினையே குணமே தொழிலே என்னும் ஆறுடனே, இவற்றின்பகுதிய ஆகிய நால்வகை அளவையே சொல்லே தானியே கருவியே காரியமே கருத்தாவேஎன்னும் ஆறும் ஆதியாக வரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானேஅப்பொருளுக்கு இயைந்த பிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறிவருவன ஆகுபெயர்களாம்.இயையாதவற்றிற்கு வருவன பலபொருள் ஒருசொல் அன்றி ஆகுபெயர் ஆகாஎன்பதாம். ‘தொன்முறை உரைப்பன’ என்றமையான், ஆகுபெயர்மேல் ஆகுபெயராயும்அடை யடுத்தும் இருபெயரொட்டாயும் வழக்கின்கண்ணும் செய்யுட் கண்ணும்பயின்று பலபொருள் ஒருசொல் போல வருவன அன்றி, இடையே தோன்றியவாறுஆக்கப்படுவன அல்ல என்பது பெறப்படும். (நன். 290 சங்.)குறிப்பால் பொருளுணர்த்தும் பெயர்களுள் ஆகுபெயரும் ஒருவகை. பொருள்இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறுடனே, இவற்றின் பகுதியவாகியஎண்ணல் – எடுத்தல் – முகத்தல் – நீட்டல் – என்னும் நால்வகை அளவுப்பெயர் சொல் தானி கருவி காரியம் கருத்தன் என்னும் ஆறும் அடிப்படையாகவரும் பொருள்களுள், ஒரு பொருளின் இயற்பெயரானே அப்பொருளினுக்கு இயைந்தபிறிதொரு பொருளைத் தொன்றுதொட்டு வருமுறையே கூறி வருவன ஆகுபெயராம்.உவமையாகுபெயர், விட்ட ஆகுபெயர், விடாத ஆகுபெயர், ஆகுபெயர்மேல்ஆகுபெயர், இருபெய ரொட் டாகு பெயர் என்பனவும் கொள்க.