ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கமே

செயப்படுபொருள் முதலிய வேற்றுமையுருபுகள் தம் பொரு ளின் தீர்ந்தும்தீராமலும் பிறவேற்றுமையொடு மயங்குதல் போல, ஆக்கப் பெயர்களும் தம்பொருளின் தீர்ந்தும் தீராமலும் ஆகுபெயராய் வந்து மயங்குதலின்,ஆகுபெயர் பற்றிய இலக்கணத்தை வேற்றுமைமயங்கியலுள் ஆசிரியர் ஓதினார்.ஆதலின் ஆகுபெயர் எழுவாய் என்பது தெளிவாம்.எழுவாய் வேற்றுமையாய் நிற்குமோர் ஆக்கப்பெயர், தன் இயற்பொருளைஉணர்த்தாமல் தன்னொடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி,அப்பொருளுணர்த்துங்கால் அஃது எழுவாயாகிய பெயரின் மயக்கமே என்பதைஓர்ந்து ஆகுபெயர் இலக்கணத்தை வேற்றுமை மயங்கியலுள் ஓதினார்ஆசிரியர்.மரபு காரணமாக ஆகுபெயர்களுள் பல, ஆக்கப் பெயராகவே இருவகை வழக்கிலும்வழங்கும். எ-டு : புளி என்பது ஒரு சுவையின் பெயர். அஃது அதனையுடையபழத்திற்கு ஆகிப் பின்னர் அப்பழத்தினையுடைய மரத்திற்கு ஆயிற்று.ஆயினும் இதுபோது மரம் ஆக்கப்பெயராகவும் பழம் ஆகுபெயராகவும்வழங்குகின்றன. (தொ. சொ. 113 ச. பால.)