ஆகுபெயரின் இருவகை

ஆகுபெயராவது ஒன்றன் பெயரை ஒன்றற்கு இட்டுச் சொல்லுமது. அதுதான்தன்னொடு தொடுத்த பொருள்மேல் வருதலும், தனக்கு எவ்வியைபும்இல்லாததன்மேல் வருதலும் என இரண்டாம். அவைதாம் ஈறுதிரிந்து நிற்கவும்பெறும். அவை வருமாறு :கடுவது காய் தின்றானைக் கடுத் தின்றான் என்றும், புளியினது காய்தின்றானைப் புளித் தின்றான் என்றும் கூறும் இவை, தம் முதலொடு சேர்ந்தஆகுபெயர். பூ நட்டு வாழும், இலை நட்டு வாழும்: இவை சினையாகுபெயர்.நீலம் அடுத்ததனை நீலம் என்றும், சிவப்பு அடுத்ததனைச் சிவப்பு என்றும்,ஏறு பட்ட இடத்தை ஏறு என்றும், அடிபட்டதனை அடி என்றும், வெள்ளாளர்காணியிற் பிறந்ததனை வெள் ளாளர்காணி என்றும், சாலியனான் நெய்யப்பட்டதனைச் சாலியன் என்றும், நாழியால் அளக்கப்பட்டதனை நாழி என்றும்,துலாத்தால் எடுக்கப்பட்டதனைத் துலாம் என்றும் வருவன தம் முதலுக்குஅடையாய் வரும் ஆகுபெயர். இனி, தொல் காப்பியம் – அவிநயம் – வில்லி -வாளி – என்பன ஈறு திரிந்து வந்தன.இருபெயரொட்டாய் வரும் ஆகுபெயரும் உள. அவை பொற்றொடி – வெள்ளாடை -கனங்குழை – என்பன. அன் மொழித்தொகையாய்க் காட்டப்பட்டனவாயினும், ஆகுபெயர்த்தன்மைக்கு ஈங்குப் பெறும். (நேமி. உருபு. 3 உரை)