உந்தியில் தோன்றிய உதானன் என்ற காற்று மிடற்றை அடைந்தபின், வாயை
அங்காத்தலால் பிறக்கும் எழுத்து இது. இதுவே எழுத்துக்களுள்
முதன்மையானது. எல்லா எழுத்துக் களும் பிறப்பதற்கும் வாயினை ஓரளவு
திறத்தல் வேண்டுதலின் எல்லா எழுத்துக்களிலும் அகரம் கலந்திருக்கிறது
என்பர் நச்சினார்க்கினியர் (தொ. எ. நச். 46). அகரம் உயிரெழுத்துக்
களில் முதலாவது. எகரம் முதல் ஒளகாரம் ஈறான உயிர்களிலும் அகரக்கூறு
கலந்துள்ளது என்பது சான்றோர் கொள்கை. தனிமெய்களைக் குறிப்பிடுமிடத்தே
அகரத்தைச் சேர்த்தே ‘வல்லெழுத்தென்ப கசட தபற’ (19) என்றாற்போல
ஒலித்துக் காட்டுவர் (46). அகரம் தனித்துச் சுட்டிடைச் சொல்லாக வரும்
(31); அவன் – அவள் – அவர் – அது – அவை என்ற பெயர் களில்
அகச்சுட்டாகவும், அக்கொற்றன் முதலிய பெயர்களில் புறச்சுட்டாகவும்,
‘அத் தம்பெருமான்’ (சீவக. 221) போன்ற இடங்களில் பண்டறி சுட்டாகவும்
வரும்.
வந்தன போன்ற வினைமுற்றுக்களிலும் வினைமுற்றுப் பெயர் களிலும்
பலவின்பால் விகுதியாகவும் (210), வருக முதலிய வியங்கோள் வினைமுற்று
விகுதியாகவும் (210), செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்திலும்,
செய்யிய என் னும் வாய்பாட்டு வினையெச்சத்திலும் இறுதிவிகுதியாகவும்
(210), ‘தன்வழிய காளை’ (சீவக. 494) போன்ற இடங்களில் அசைச்சொல்லாகவும்
அகரம் நிகழும். நெடுமுதல் குறுகும் சொற்களான தாம் – நாம் – யாம் –
தான் – யான் – முதலியன அகரச்சாரியை பெற்றுப் பின்னர் நான்கனுருபும்
ஆறனுருபும் ஏற்கும் (161). எனவே, அகரம் நெடுமுதல் குறுகும் மொழி களின்
ஈற்றில் சாரியையாகவும் வரும். அகரம் ஆறாம் வேற் றுமைப் பன்மை யுருபாக
‘எனகைகள்’ என்பன முதலாகவும் வரும்; வடசொற்களில் மறுதலைப் பொருளைக்
காட்ட ‘அரூபம்’ என்றாற்போல முன் அடையாக வரும்; உம்மை எஞ்சிய
இருபெயருள் (223) முதற்பெயர் ஆகாரஈற்றதாய இடத்தும் (உவாஅப்
பதினான்கு), குறிலை அடுத்த ஆகார ஈற்றுச்சொல் முன்னரும், ஆகார ஈற்று
ஓரெழுத்தொரு மொழி முன்னரும் (பலாஅக் கோடு, காஅக்குறை) எழுத்துப்
பேறளபெடையாக (226) வரும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெற்று ஆன்
என்றாகிய இடத்து வருமொழி மென் கணத்தில் தொடங்கு மிடத்தும் (ஆனநெய்)
232, பொருந் – வெரிந் – என்ற சொற்களின் வேற்றுமைப் புணர்ச்சியிலும்
(299), எகின் என்ற சொல் வருமொழியொடு புணருமிடத்தும் (எகினக்கால்,
எகினச் சேவல்) 337, கன் என்ற சொல்லின் வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண்ணும் (கன்னக் குடம்) 346, வல் என்ற சொற்கு முன் நாய் –
பலகை – என்பன வரு மிடத்தும் (வல்லநாய், வல்லப் பலகை) 374 அகரம் சாரியை
யாக வரும். தொல்காப்பியனார் கூறும் அக்குச்சாரியையை நன்னூலார் அகரச்
சாரிiயாகக் கொள்வர். (தொ. சூ.வி. பக். 8)