அ ஆ முதலியன இனமாதல்

அ, ஆ என்பன இரண்டும், இடத்தானும்
– முயற்சியானும் – அறாயிரம் ஆறாயிரம் என்னும் பொருளானும் – வடிவானும்
-ஒருபுடை ஒத்து இனமாயின.
இ, ஈ என்பன இரண்டும், இடத்தானும்
– முயற்சியானும் – இராயிரம் ஈராயிரம் என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ஐகாரம், இவற்றுள் இடத்தானும்
முயற்சியானும் ஒத்து இகரத்தொடு கூடி இனமாயிற்று.
உ, ஊ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – உங்கு ஊங்கு என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ஒளகாரம், இவற்றுள் இடத்தானும்
முயற்சியானும் ஒத்து உகரத்தொடு கூடி இனமாயிற்று.
எ, ஏ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – எழாயிரம் ஏழாயிரம் என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ஒ, ஓ என்பன, இடத்தானும் –
முயற்சியானும் – ஒராயிரம் ஓராயிரம் என்னும் பொருளானும் – வடிவானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
க, ங இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – குளக்கரை குளங்கரை என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ச, ஞ இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – மச்சிகன் மஞ்சிகன் என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமா யின.
ட, ண இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – மட்குடம் மண்குடம் என்னும் பொருளானும் – ஒரு புடை
ஒத்து இனமாயின.
த, ந இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – பாழ்த்தூறு பாழ்ந்தூறு என்னும் பொருளானும் – ஒருபுடை
ஒத்து இனமாயின.
ப, ம இரண்டும், முயற்சியானும் –
மாத்திரையானும் – வேய்ப்புறம் வேய்ம்புறம் என்னும் பொருளானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ய, ர இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – வேயல் வேரல் என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின.
ல, வ இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – எல்லாவகை எவ்வகை என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின.
ழ, ள இரண்டும், இடத்தானும் –
மாத்திரையானும் – காழக உடையான் காளக உடையான் என்னும் பொருளானும் –
ஒருபுடை ஒத்து இனமாயின.
ற, ன இரண்டும் முயற்சியானும் –
மாத்திரையானும் – நற்கு நன்கு என்னும் பொருளானும் – ஒருபுடை ஒத்து
இனமாயின. (நன். 71 மயிலை.)