சங்ககாலத்துத் தெரியவியலாத இவ்வூர், இன்னும் இப்பெயராலேயே வழங்கப்படுகிறது. புதுமையாக அமையும் இப்பெயர்க் காரணம் தெளிவாக இல்லை. இதனைக் குறித்த புராணக் கதை ஒன்று உள்ளது. எனினும் இப்பெயர், கல்வெட்டில் அவளிவளநல்லூர் என்று குறிப்பிடப்படுமாற்றை நோக்க அவளிவளநல்லூர் என்னும் இப்பெயரமைப்பு வளநல்லூருக்கு சிறப்புக்கூறாக அடையாக அவளி என்ற சொல் அமைந்ததோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அவல் என்பது காளானையும் அவணம் கொட்டைப்பாக்கின் மிகுதியையும் குறிப்பிடும் நிலையில் (தமிழ் லெக்ஸிகன் vol – I Part I பக். 151. 152 ) இப்பொருட்களின் செல்வாக்கில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாமா? என்பது ஆய்வுக்குரியது. எனினும் அவளிவளநல்லூர் என்ற ஊரில் சிவன் கோயில் மிகவும் சிறப்புடன் திகழ்ந்தது என்பது, சம்பந்தர் திருநாவுக் கரசர் பாடல் பெற்ற தலமாக இது விளங்குவதினின்றும் தெரிய இயலுகிறது. (திருஞா. பதி 340, திருநா பதி 59 ), சேக்கிழாரும் அதிர் சிலம்படியார் மகிழ் அவளிவளநல்லூர் என இதனைப் போற்றுகின் றார் ( திருஞான. 373 ).