சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூற்களில், அவந்தி என்றும், அவந்தி நாடு என்றும் குறிக்கப்பெற்றுள்ள ஊர். அவந்தி ஒரு நாடு என்றும், இதன் தலைநகர் உஞ்சேனை என்றும், மன்னன் பிரச் சோதனன் என்றும் தெரிகிறது. அவந்தி என்பதற்கு உச்சைனி நகர் என்றே பொருள் எழுதினார் அடியார்க்கு நல்லார். அவந்தி என்பது மாளவ தேசத்தில் ஒருபட்டணம் என்றும், இங்கே பலராமனும் கண்ணனும் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்றனர் என்றும் விஷ்ணு புராணம் கூறும். கி.மு, 6ஆம் நூற்நாண்டில் சண்டப் பிரத்தியோதனன் முதலிய வீரர்கள் இந்நாட்டை ஆண்டு வந்ததாகப் பெளத்த நூல்கள் கூறும். கதைகளில் வரும் விக்கிரமாதித்தன் இந்த நாட்டில் அரசு புரிந்தான் என்பார்கள். இது பிற்காலத்தில் மேற்கு மாளவம் என்னும் பகுதியின் பெயராகவும், உச்சயினி தலைநகரின் பெயராகவும் ஆயிற்று. அவந்திக் கொல்லர் புகழ் பெற்றிருந்தனர்.
“அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்” (சிலப். 5 : 103 104)
“செம்பியன் மூதூர்ச் சென்று புக்காங்கு
வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்திருக்க” (௸. 28 : 85 87)
“வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்”. (மணிமே. 9 : 28)
“மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினிதியற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத்திரள்கால் பல்மணிப் போதகை” (௸. 19: 107 111)
“யுவனத்தச்சரும் அவந்ததிக் கொல்லரும்” (பெருங்1;58;40)