அழும்பில்‌

மதுரைக்‌ காஞ்சி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம்‌ ஆகிய இலக்கியங்களில்‌ அழும்பில்‌ என்ற ஊர்ப்பெயர்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. மானவிறல்வேள்‌ என்ற குறுநில மன்னனுக்குரியது அழும்பில்‌ என்று மதுரைக்‌ காஞ்சி கூறுகிறது. அழும்பில்‌ ஒழியாத புது வருவாயினையுடயது என்றும்‌ சென்னிக்குரியது என்றும்‌ அகநானூறு கூறுகிறது. “பெரும்பூண்‌ சென்னி அழும்பில்‌” என்று கூறப்பெறுவதால்‌ இவ்வூர்‌ சோழ நாட்டினது எனக்‌ கருத இடமளிக்கிறது. சேர நாட்டிலும்‌ அழும்பில்‌ என்ற பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ இருப்பதாகத்‌ தெரிகிறது. புதுக்கோட்டைச்‌ சீமையில்‌ உள்ள அம்புக்‌ கோயில்‌ என்ற ஊரே பழைய அழும்பில்‌ என்ற கருத்தும்‌ உள்ளது. இவ்வூரில்‌ உள்ள சிவன்கோயில்‌ *அழும்பிற்‌ கோவில்‌’ என வழங்கி, அதுவே நாளடைவில்‌ அம்புக்கோயில்‌ என மருவி ஊர்ப்பெயராயிற்று என்பர்‌. “இராசராச வளநாட்டுப்‌ பன்றியூர்நாட்டு அழும்பில்”‌ என்று புதுக்கோட்டை கல்வெட்டொன்று குறிக்கிறது. சங்க இலக்கியப்‌ பாடல்களிலும்‌ சோழநாட்டு ஊராகக்‌ கூறப்‌ பெற்றிருப்பதால்‌ ரா. பி. சேதுப்பிள்ளையின்‌ கருத்து பொருத்த மானதாகத்‌ தோன்றுகிறது.
“விளங்கு பெருந்திருவின்‌ மானவிறல்வேள்‌
அழும்பில்‌ அன்ன நாடிழந்‌ தனரும்‌” (பத்துப்‌. மதுரைக்‌, 344 345)
“பிணையலங்‌ கண்ணி பெரும்பூட்‌ சென்னி
அழும்பில்‌ அன்ன அறா யாணர்‌” (அகம்‌. 44:14.15)
“மாறுகொள்‌ முதலையொடு ஊழ்‌ மாறுபெயரும்‌
அழும்பிலன்‌ அடங்கான்‌ தசையும்‌ என்றும்‌”* புறம்‌. 283:5 6).
“அறைபறையென்றே யழும்பில்‌ வேளுரைப்ப” (சிலப்‌. 25:177)