அள்ளூர் என்பது பாண்டி நாட்டில் சிவ கங்கை வட்டத்தி லுள்ள ஓர் ஊர், நன்முல்லையார் என்ற சங்ககாலப் புலவர் ஒருவர் இவ்வூரினராதலின் அள்ளூர் நன்முல்லையார் என ஊராற் பெயர் பெற்றார். இவர் பாடல்கள் குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றன. பாண்டியனின் அள்ளூர் நெற்குவியலையுடையது என்றும் அவ்வூர் போன்ற நலமுடையவள் தலைவி என்றும் பெண்ணின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது. அள் என்ற சொல் செறிவு என்னும் பொருளது, நெல் செறிந்த ஊர் அள்ளூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். “பிண்ட நெல்லின் அள்ளூர்’” என்ற சங்க இலக்கியத் தொடர் இதை வலி யுறுத்தும். இதே பெயர் கொண்ட ஊர் ஒன்று சோழநாட்டில் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளது. குறுந்தொகை 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237 ஆகிய பாடல்களும், அகநானூற்று 46ஆம் பாடலும் புறநானூற்று 306ஆம் பாடலும் அள்ளூர் நன்முல்லையார் என்ற பெண்பாற் புலவர் பாடியவை.
“ஒளிறுவாள் தானைக் கொற்றச்செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஓண்டொடி நெகிழினும்நெகிழ்க” (அகம். 4613 15)