ஒருகலம் ஒருகழஞ்சு ஒருகடல் – ஒன்று ‘ஒரு’ என்றாகும்.
இருகலம் இருகழஞ்சு இருசுடர் – இரண்டு ‘இரு’ என்றா கும். (தொ. எ.
446 நச்.)
முக்கலம் முக்கழஞ்சு முச்சுடர் – மூன்று ‘மு’ என நின்று வந்த
வல்லெழுத்து மிகும். (447)
நாற்கலம் நாற்கழஞ்சு நாற்பொருள் – நான்கு ஈறுகெட்டு னகரம் றகரம்
ஆகும். (442)
ஐங்கலம் ஐங்கழஞ்சு ஐந்தீ – ஐந்தன் நகரம் வரும் வல் லெழுத்தினது
இன மெல் லெழுத்து ஆகும். (448)
அறுகலம் அறுகழஞ்சு அறுசுவை – ஆறு ‘அறு’ எனக் குறுகிப் புணரும்.
(440)
எழுகலம் எழுகழஞ்சு எழுபொருள் – ஏழ் ‘எழு’ எனத் திரிந்து புணரும்
(389)
எண்கலம் எண்கழஞ்சு எண்பொருள் – எட்டு ஈறுகெட்டு டக ரம் ணகரமாகத்
திரிந்து புணரும். (444)
வருமொழி முதலில் ந ம வ என்பனவும் உயிரும் வரின், எட்டு ‘எண்’
என்றாக, வருமொழி நகரம் ணகரமாக எண்ணாழி எனவும், எண் மண்டை – எண் வட்டி
– என வேறு திரிபு இன்றியும், எண் + அகல் = எண்ணகல் என்றாற் போல நிலை
மொழியில் தனிக்குறிலை யடுத்த ணகர ஒற்று இரட்டித்தும் புணரும்.
(450)
ஒன்பது, ஒன்பதின் அகல் – ஒன்பதின் சாடி – எனவும், ஒன்பதிற்றுக்
கலம் – ஒன்பதிற்றகல் – எனவும், ‘இன்’ பெற்றும் ‘இன்’ இற்றாகத்
திரிந்தும் புணரும். (459)
ஐந்தும் மூன்றும், வருமொழியில் ந ம வரின், வந்த ஒற்று
மிகும்.
வருமாறு : ஐந்நாழி, ஐம்மண்டை; முந்நாழி, மும்மண்டை (451)
மூன்று, வருமொழியில் வகரம் வருவழி ஈறுகெட்டு (நெடு முதல் குறுகி)
னகரம் வகரமாகிப் புணரும். வருமாறு: முவ்வட்டி (452)
நான்கு, வகரமுதன்மொழி வருவழி, ஈறுகெட்டு னகரம் லகரமாகிப் புணரும்.
வருமாறு : நால் வட்டி (453)
ஐந்து, வகரமுதன்மொழி வருவழி ஈறுகெட்டு இடை நகரம் கெட்டும் வகரஒற்று
மிக்கும் புணரும். வருமாறு : ஐவட்டி, ஐவ்வட்டி (454)
ஒன்று இரண்டு என்பன நிலைமொழிகளாக, வருமொழி முதலில் உயிர்வரின்,
‘ஒரு’ ஓராகவும், ‘இரு’ ஈராகவும் திரிந்து,
ஓரகல் – ஈரகல் – ஓருழக்கு – ஈருழக்கு என்றாற் போலப் புணரும்.
(455)
மூன்றும் நான்கும் ஐந்தும் நிலைமொழிகளாக, வருமொழி முதலில் வகரம்
வரின், முவ்வகல் – முவ்வுழக்கு, நாலகல் – நாலுழக்கு, ஐயகல் – ஐயுழக்கு
– என வரும். (456)
ஆறு என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், ஆறகல் –
ஆறுழக்கு – என இயல்பாகப் புணரும். (458)
மூன்று என்பது நிலைமொழியாக, வருமொழி முதலில் உயிர் வரின், மூன்று +
உழக்கு = மூவுழக்கு, மூன்று + அகல் = மூவகல் என்றாற் போல,
நிலைமொழியில் முதலெழுத்து நீங்கலான ஏனைய கெட்டு உடம்படுமெய் பெற்றுப்
புணரும். (457)