அளபெடைகளைத் தனியெழுத்தாகத் தொல்காப்பியனார் எண்ணவில்லை. நெடில்
ஏழும் அளபெடுத்தலின், இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்
அளபெடையெழுத்து ஏழ் என்றனர். இ.வி. நூலாரும் அளபெடை ஏழ் என்றே
கூறினார். தனி – முதல் – இடை – கடை – என அளபெடையை நால் வகைப்
படுத்திக் கூறுவாருமுளர்.
நன்னூலார் தனிநிலையை முதல்நிலையில் அடக்கி, ஏழ்
நெட்டெழுத்துக்களும் மொழி முதல் இடை கடை என்ற மூவிடத்தும் வர, அளபெடை
21 என்றார். நெடில் ஏழனுள் ஒளகாரம் மொழிமுதலிலேயே அளபெடையாக வருதல்
கூடும்; ஏனைய ஆறும் மொழிமூவிடத்தும் வரும். ஆதலின் அளபெடை எண்ணிக்கை
19 ஆக, அவற்றுடன் இன்னிசை யளபெடை சொல்லிசையளபெடை என்ற இவற்றைக் கூட்டி
அளபெடை 21 என்பர் சங்கரநமச்சிவாயர். இன்னிசை சொல் லிசையளபெடைகள்
முற்கூறிய அளபெடையுள் அடங்கும் ஆதலின், 21 என்று இவற்றைக் கூட்டிக்
கொள்ளுதல் சாலாது. அளபெடையின் கணக்கில் குரீஇ முதலிய இயற்கை
யளபெடையையும் கொள்ளுதல் வேண்டும்.
அளபெடை என்பன நெடிலையடுத்து ஓசை நிறைக்க வரும் இனக் குற்றுயிராகிய
ஐந்தே ஆதலின், அவற்றைச் சார்பெழுத் தாகக் கொண்டு தனியே கணக்கிடுதல்
தொல்காப்பிய னார்க்குக் கருத்தன்று.
அளபெடை பிளவுபடா ஓசையாயின், ‘கடாஅக் களிற்றின் மேல்’, ‘படாஅ
முலைமேல்’ (குறள் 1087) என்பனவற்றில் க, டாஅ; ப, டாஅ – என்று அலகு
பிரித்தல் வேண்டும். இவ்வாறு பிரித்தால் தளை சிதையும். ஆதலின் கடா, அ;
படா, அ – என்றே பிரித்தல் வேண்டும். ஓசையை நெடிலாகவும் குறிலாகவும்
பகுத்து அசைகொள்ளவேண்டு மெனில், ஒரு நெடிலையே இருகுறிலாகப் பகுத்துக்
கடா என்பதனைக் கட, அ என்றும் அசை கொள்ளலாம்; அவ்வாறு யாரும்
கொள்வதில்லை. ஆதலின் அளபெடை என்ற குற்றெழுத்துத் தனக்கொத்த நெடிலை
அடுத்த தனிக்குறிலாய் அசைநிலை பெறுதல், சீரும் தளையும் சிதையின்
அசைநிலை பெறாமை – ஆகிய இருநிலை யும் பெறுதல் உணரப்படும். (எ. ஆ. பக்.
44, 45)
(‘காட்டில் வளந்தழைத்தல்
காணூஉக் களித்துத்தன்’ என்னும்
வெண்பா அடிக்கண், அளபெடையாகிய உகரக் குற்றுயிர் அலகு பெறாது நிற்ப,
காணூ என்ற சொல் போல வருஞ்சீரோடு இயற்சீர்வெண்டளையான்
இசைந்தவாறு.)