ஒலிவேற்றுமையால் எழுத்துப் பலவாயின. அங்ஙனமாக நெடிலது விகாரமாய்
ஓரொலியாய்ப் பிறக்கும் அள பெடையை இரண்டெழுத்துக் கூடி மூன்று மாத்திரை
ஆயிற்று எனக் கொள்ளின், இரண்டு எழுத்தொலி அங்ஙனம் ஒன்றில்லை. அதற்கு
அளபெடை என்னும் பெயர் ஏலா தொழியும். ஆதலின் அவ்வாறு
இரண்டெழுத்தொலியாகக் கொள்ளாது அறிகுறியே என்று கோடற்குக் ‘குறியே’
என்றார். தொல்காப்பியனார், ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து’ என்றும், அவற்றின் பின் அறிகுறியாக வரும் ஒத்த
குற்றெழுத்து என்றும் கூறினார் (எனவே, நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப்
பிறக்கும் மூன்று மாத்திரை அளவிற்றாம் எழுத்தே உயிரளபெடையாம் என்பது.)
(நன். 91 சங்கர.)