அளபெடையாவது நெடிலொடு கூடி வரும் குற்றெழுத்தாகும். நெடிலோசையொடு
குறிலோசை பிளவுபடாது இணைந்து வருவதாம். கோட்டு நூறும் மஞ்சளும்
கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய
கூட்டத்துப் பின்னர் அப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர்
வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத் தல்லது புலப்படா, எள்ளாட்டிய
வழியல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என்பது. (தொ. எ. 6 நச். உரை)
உயிரளபெடையில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் தனித்தனியே நிற்கும்
ஆதலின், ‘கடாஅ’ என்பதனைக் கடா, அ என்று பிரித்து அசை அமைக்கிறோம்.
ஆதலின் அளபெடையில் நெடிலும் குறிலும், நீரும் நீரும் சேர்ந்தாற்
போலவும் கோட்டு நூறும் மஞ்சளும் கூடினாற் போலவும் இணையாது, விரலும்
விரலும் சேர்ந்தாற் போல இணைந்துள்ளவை என்பது உணரப்படும். (எ. ஆ. பக்.
46).