அல்வழியாவன

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதன அல்வழிப் புணர்ச்சியாம். ‘வேற்றுமை
அல்வழி’ என்பதே அதன் முழுப்பெயர்; சுருக்கம் கருதி இஃது ‘அல்வழி’
எனப்படுகிறது.
எழுவாய் வேற்றுமையானது பொருண்மை சுட்டல் – வியங்கொள வருதல் –
வினைநிலை உரைத்தல் – வினாவிற்கு ஏற்றல் – பண்பு கொள வருதல் – பெயர்கொள
வருதல் – என்ற ஆறுபயனிலைகளொடும் புணர்ந்த புணர்ச்சியும், முற்றானது
பெயரொடும் வினையொடும் புணர்ந்த புணர்ச்சியும், பெய ரெச்சமும்
வினையெச்சமும் முறையே பெயரொடும் வினை யொடும் புணர்ந்த புணர்ச்சியும்,
உவமத்தொகையும் உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்
தம்முள் நிலைமொழி வருமொழியாகப் புணர்ந்த புணர்ச்சியும், இடைச்சொல்லும்
உரிச்சொல்லும் பெயரொடும் வினையொ டும் புணர்ந்த புணர்ச்சியும்,
அன்மொழித்தொகை பெயர் வினைகளோடு புணர்ந்த புணர்ச்சியும்,
வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றவழிப் புணர்ந்த
புணர்ச்சி யும்
அல்வழிப் புணர்ச்சியாம். (தொ. எ.
112 நச்.)
புணர்ச்சி என்பது நிலைமொழி வருமொழி இரண்ட னிடையே நிகழ்வதாதலின்,
பண்புத்தொகையும் வினைத் தொகையும் பிரித்துப் புணர்க்கப்படா (தொ. எ.
483) என்று ஆசிரியர் கூறியதனான், அவற்றை இருசொல்லாக அவற்றின் இயல்பான
நிலையில் கொள்ளுதல் இயலாது என்று கருதி, நச்சினார்க்கினியர்
‘வினைத்தொகையும் பண்புத்தொகையும் விரிந்து நின்றுவழிப் புணரும்
புணர்ச்சி’ என்று விளக்கிக் கூறினார்.