அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாதது அல்வழிப் புணர்ச்சியாம். அது
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகை, இந்நான்கன்
புறத்தும் பிறந்த அன் மொழித் தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர்,
இருவகை வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர்,
இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத்தொடர் எனப் பதினான்காம்.
(இத்தொகை தொகா நிலைத் தொடர்களில் நிலைமொழியும் வருமொழி யும் புணருமாறு
அல்வழிப்புணர்ச்சியாம்).
எ-டு : கொல்யானை, கருங்குதிரை – பலாமரம், மதிமுகம், கபில பரணர்,
கருங்குழல் (வந்தாள்) – இவையாறும் தொகைநிலைத் தொடர். பொன்னன் வந்தான்,
பொன்னா வா, வந்த மன்னன் – பெரிய மன்னன், வந்துபோனான் – மெல்லப்
போனான், வந்தான் பொன்னன் – குழையன் பொன்னன், மற்றொன்று, நனிபேதை,
பாம்பு பாம்பு – என முறையே காண்க. (தெரிநிலையும் குறிப்புமாக இருவகைப்
பெய ரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர்கள் வினை முற்றுத் தொடர்கள்
கொள்ளப்பட்டன). (நன். 152)