நல்லூர் இன்று அரகண்ட நல்லூர் என்று குறிக்கப்படும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், ( பதி -213) சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது. இன்று, தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குப் பக்கத்தில் பெண்ணையாற்றின் கரையில் ஒரு சிறிய மலைமேல் கோயில் உள்ளது. என்பதையும்,
கோவில் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல் பணிந் தேத்தி
ஆலின் ஐந்துகந் தாடுவார் அறையணி நல்லூரை
அணைந்தேத்தி என சேக்கிழார். ஞானசம்பந்தர் ( 34-968 ) சென்ற தலச் சிறப்பு கூறுவதையும் ஒப்பிட கோவலூருக்குப் பக்கத்தில் உள்ளது இவ்வூர் என்பது ஐயமின்றி விளக்கம் பெறுகிறது. மேலும் மலைமேல் இக்கோயில் இருப்பதைக் காண ( அறை – பாறை ) அறையின் மேல் கோயில் அணிபெறும் சிறந்த ஊர் என்ற அடிப்படையில் இப்பெயர் தோன்றியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இன்று அரகண்ட நல்லூர் என்று, அறையணி நல்லூர் திரிந்து வழங்குகிறதா அல்லது இதற்கு அடிப்படைக் காரணம் வேறு ஏதாவது உள்ளதா என்பது விளக்கமாகவில்லை. எனினும் நல்லூர் திரியாது நிற்பதை நோக்க அறையணி நல்லூரே திரிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.