அரில் – மயக்கம்; தப – கெட.
இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன்றாகப்
பிறழக்கொள்ளும் திரிபும் ஆகிய மயக் கங்கள் நீங்குமாறு தெரிவித்தல்.
தெரிதல் என்ற தன்வினை தெரிவித்தல் என்ற பிறவினைப் பொருளது என்ப. (தொ.
சி. பாயி.)
கடா அறத் தெரிந்து கூறி – இள.
குற்றமற ஆராய்ந்து கூறி – நச்.
குற்றமறத் தெரிவித்து – சிவ. பா. வி., எ.கு.
‘அரில்தபத் தெரிந்து’ என்பதனைத் தன்வினையாகக் கொண்டு, நூற்குச்
சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி (ஒன்றனுள் பிறிதொன்று கலவாத
மரபினையுடைய தனது நூல்முறையைக் காட்டி) என்று உரை கூறுவர், அரசஞ்
சண்முகனார். (பா. வி. பக். 161)
“தெரிந்து என்பதற்கு விளங்கி என்று பொருள்கூறி மரபின் வினை
ஆக்காது, கடாஅறத் தெரிந்து கூறி எனவும், குற்றமற ஆராய்ந்து கூறி
எனவும், தெரிவித்து எனவும் ஆசிரியன் வினையாக்கி அம்மூவரும் உரைத்தார்.
கடாஅறத் தெரிதலும் குற்றமற ஆராய்தலும் நூல் செய்யுங்காலை
வேண்டப்படுதல் அன்றி நூல் அரங்கேற்றுங்காலை வேண்டப்படாமையானும், ஓர்
ஏதுவுமின்றிக் ‘கூறி’ என்னும் சொல் வருவித்தல் கூடாமை யானும்,
‘தெரிவித்து என்பது தெரிந்து என நின்றது’ எனல் இலக்கணம் ஆகாமையானும்
அவருரை பொருந்தா என்பது.” (பா. வி. பக். 215).
சண்முகனார் கருத்தால், ‘நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற
விளங்கி, ஒன்றனுள் ஒன்று கலவாத மரபினையுடையது தொல்காப்பியம்’ என,
‘அரில் தபத் தெரிதல்’ என்பது தொல்காப்பிய நூலுக்கு அடைமொழி ஆகும்.