சங்க இலக்கியம் அரிசில் என்ற ஊர்ப்பெயரைச் சுட்டுகிறது. பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தினைப் பாடியவர் அரிசில் கிழார் என்றபுலவர். அரிசில் என்ற ஊர் கொங்கு நாட்டு ஊர் என்பது மயிலைசீனி வேங்கடசாமி கருத்து அரிசிலாறு என்ற ஆறு பற்றிய எண்ணத்தையும் காண்கின்றோம். காவிரியாற்றின் கிளை குடந்தைக் கருகில் பிரியும் நிலையில் இப்பெயர் பெறுகிறது எனக் காணவும் ( தமிழ் இலக்கியத்தில் ஆறு. பக். 2) அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் (9 ) என சுந்தரர் பாடலும் இன்று கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் இத்தலம் உண்மையையும் உணர. அரிசில், அரிசிற்கரைப் புத்தூர் இரண்டின் நெருக்கம் தெரியவருகிறது. எனவே சங்ககாலத்தில் அரசில் என்று குறிப் பிடப்பட்ட ஆற்றுப் பெயரே ஊர்ப்பெயராக வழங்கிய நிலையில், பின்னர், கரையும், புத்தூரும் இணைந்த ஊர்ப்பெயர் உரு வாகியிருக்கலாம். மட்டுமல்லாது மூவராலும் பாடப்பட்ட இத்தலத்தை புத்தூர், அரிசிற்கரைப் புத்தூர், திருப்புத்தூர், அரிசிற் தென்கரை அழகார் திருப்புத்தூர் என்ற பெயர்களாலும் சுட்டுகின்றனர். திருநாவுக்கரசர் அரிசிலாற்றங்கரையில் உள்ள அரசிற் கரைப்புத்தூர் கூறிய நிலை யினின்றும். அழகார் புத்தூர் என்ற அவரது கூற்றே நிலை பெற்ற வழக்காக அமைகிறது. இவ்வூருக்கு அரிசில் என்ற பெயர் அடிப்படை என்பதை வண் உறுதியாகச் சொல்லலாம். ஆயின், அரிசில் என்ற பெயர் நதிப்பெயரா அல்லது இவ்வூரின் பழம் பெயரா என்பது ஆராயத் தக்கது. அரிசில் பழைய ஊராக அமைய அரசிற் கரைப்புத்தூர், சிவன் கோயில் பக்கத்தில் அமைந்த புதிய ஊராகவும் இருக்கலாம். நதிப்பெயரா யினும், இடப்பெயராயினும் அதன் தொன்மை காணல் முக்கியம். அரிசில் என்பதற்கு மூலம் அரிசியாக இருத்தல் அவ்விடத்தைப் பொறுத்தவரைப் பொருத்தமில்லாது இருக்கின்றது. அரிசிப்புல் என்ற புல்வகையினைத் தமிழ் லெக்ஸிகன் சுட்டுகிறது. (Species of millet – Vol | பக் -126 ) இப்புல் இவ்வாற்றின் கரையில் நிறைந்து வளர்ந்து காணப்பட்டிருக்கலாம். எனவே அரிசிப்புல் அரிசிலுக்கு அடிப்படையாயிற்று எனக் கொள்ளலாம். அடுத்து, தமிழ் இலக்கியத்தில் ஆறு என்ற நூலில் கி. நாச்சிமுத்து அவர்கள், ஆறுகள் பெயர் பெறும் நிலைக்குரிய காரணங் அலசியிருக்கிறார். அவற்றுள் ஆற்றினுள் விளையும் பொருட்களால் பெயர் பெறும் நிலையையும், ஊர்ப்பெயர் காரணமாக ஆறுகள் பெயர் பெறும் நிலையையும் சுட்டுகிறார். இந்நிலையில் அரிசில் என்ற பெயர் காவிரியின் கிளை நதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால், இது கரையில் நின்ற அரிசிப்புற்களால் பெயர் பெற்றிருக்கலாம் அல்லது அந்த இடம் அரிசிப்புல்லால் முதலில் பெயர் பெற்று, பின்னர், அப்பகுதி ஆறும் அப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பல களை அரிசொல் அரிசில் என்றாயிற்று என்றும் விஷணுவின் சொற் படியே இவ்வாறு ஓடியது என்றும் அதனால் பெற்ற பெயர் என்றும் இதனைப் பற்றிய எண்ணமொன்றும் வழங்குகிறது. “திருநாவுக்கரசர் அரிசிற் பெருந்துறை எனவும் இறைவன் தல மொன்றைக் குறிப்பிடுகின்றார். இதனைச் சுட்டும் போது,
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான் கா
ணரிசிற் பெருந்துறையே யாட்சி கொண்ட
சித்தன் காண் சித்தீச்சரத்தான் காண் ( பதி 301-4) என்று பாடுகின்றார். புத்தூர் வேற அரிசிற் பெருந்துறை வேறு என்பது இவண் விளக்கம் பெறுகிறது. ஒருவேளை அரிசிலிற் காணப்பட்ட இன்னொரு சிவன் கோயிலாக இருக்கலாம் அரிசில் பெருந்துறை, சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் என்ற நூலிலோ அல்லது தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஆய்வு செய்த பிறரோ அரிசிற் பெருந்துறையை ஒரு தலமாகச் சுட்டாததால் அரிசிற் கரை மக்களை முழுமையாகக் கவர்ந்து கொண்ட சித்தன் எனச் சுட்டியிருக்கலாம். மட்டுமல்லாது புத்தூர் பகுதியைச் சார்ந்த இடமாகவே இது இருக்கவேண்டும் என்பதற்கு, அரிசிற்கரைப் புத்தூருக்கு 1 கி மீ. தொலைவில் உள்ள சித்தீச்சரத்தை அடுத்துச் சுட்டுவதை இயம்பலாம். ” அழகா புத்தூர் என்றழைக்கப்படும் அரிசிற் கரைப் புத்தூருக்கு செருவிலி புத்தூர் என்னும் பழம் பெயர் உண்டு என்ற கருத்தும் அமைகிறது.”