பண்டு தொட்டு இன்றுவரை, பேரும் புகழும் பெற்ற வைணவத் தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்குவது அரங்கம், ஸ்ரீரங்கம் என்று இப்போது வழங்கப்படும் இவ்வூர் சிலப்பதி காரத்திலேயே சிறப்பிடம் பெற்ற இடமாக அமைந்தது. (சிலம்பு 10-156 ) இங்குள்ள அரங்கன் பற்றி பல புராணக்கருத்துகள் வழங்குகின்றன. எனினும் மக்கள் மனத்தில் இவன் மிகுந்த இடம்பற்றிக் கொண்டான் என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன. மிகப்பெரிய கோயிலையும், ஏழு பிரகாரங்களையும், இருபத்தொரு கோபுரங்களையும் கொண்ட இவ்வரங்கன் மீது ஆழ்வார் பலரும் பாமாலை பொழிந்துள்ளனர். ஆற்றின் நடுவே உள்ள இடைக்குறைக்கு அரங்கம் என்றும் துருத்தி என்றும் பெயர் உள்ளன. ரங்கம் வடமொழிப் பெயர். ( ஊரும் பேரும் பக். 18) அரங்கத்தில் பள்ளி கொண்டமையால் போலும். 1 அரங்க நாதன் என்ற பெயரையும் பெற்றான். இத்திரு அரங்கம் சிறப்பு பெற்று திகழ்ந்தமை ஆழ்வார் பாடல் அனைத் தாலும் தெளிவு பெறுகிறது. இக்கோயிலின் பெயர் பின்னர் அத்தலம் முழுமையும் குறித்து ஊர்ப்பெயராக அமைந்தது என்பது விளக்கமாகத் தெரிகிறது. திருச்சியில் காவிரிக்கும் கொள் ளிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளமையால் இப்பெயர் அமைகிறது. அரங்கத்திற்குரிய போகமண்டபம் பூலோக வைகுண்டம் போன்ற பெயர்களும் இதன் சிறப்பு நோக்கி எழுந்தவை. மேலும், சைவத்தில் கோயில் என்பது தில்லையைக் குறிப்பது போன்று, வைணவத்தில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிப்பது இதன் பெருஞ்சிறப்பு உணர்த்தும் நிலையாகும். பல கல்வெட்டுகளில் இக்கோயில் பற்றிய பல செய்திகளும், அரசியல் தொடர்புடையச் செய்திகளும், அரசர் செய்த பணிகளும் சுட்டப்படுகின்றன.