அம்மை

நூல்வனப்புக்கள் எட்டனுள் ஒன்று. சின்மையவாய் மெல்லிய வாகியசொற்களாலும், இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தாலும் அடி பலவாய்வருதலின்றி நிகழ்வது அம்மை எனப்படும். அங்ஙனம் வந்தது பதினெண் கீழ்க்கணக்கு. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவனபோன்றும், இடையிடையே அவ்வாறு அல்ல ஆகியும், பதினெண்கீழ்க்கணக்குநூல்கள் நிகழுமாறு காண்க. ஆசாரக் கோவையுள் ‘ஆரெயில் மூன்றும்’ என்னும்தற்சிறப்புப் பாயிரம் ஆறுஅடியால் சிறுபான்மை வந்தது. ஆறடியளவிற்குறையப் பாடல் வருவதே பெரும்பான்மை.அம்மை – குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்பது அம்மை. (தொ. செய். 235நச்.)