உயிரோடு உயிர்க்கு மயக்கம் இன்மையின், அஇ – அஉ – என இங்ஙனம் கூறிய
குற்றுயிர்களை வலிந்து மயக்கிக் கூறின் ஐகார ஒளகாரம் போல்
இசைத்தலானும், குற்றொற்றுக்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலின்
இரண்டுமாத்திரையவாகிய ஐகார ஒளகாரங்களோடு ஒவ்வாமையின் ஒலிவகையான்
மயக்கிக் கூறின் அவை ஒத்திசைத்தலானும், அவற்றுள்ளும் வகரம் பிறப்பு
வேறுபாட்டான் ஒலியும் ஒருபுடை ஒத்தலானும் ‘எய்தின்’ என்றார்.
வருமாறு : அஇ = ஐ, அய் = ஐ; கஇ = கை, கய் = கை.
அஉ = ஒள, அவ் = ஒள; கஉ = கௌ, கவ் = கௌ (நன்.125 சங்கர.)