அம்பர் என்றதொரு ஊர்ப்பெயர் சங்க காலம் தொட்டே தெரிய வருகின்றது. அம்பர் தொடர்பாக இக்காலத்து மூன்று ஊர்ப்பெயர்களைக் காண்கின்றோம். அம்பர், அம்பர் மாகா ளம் இன்னம்பர் என்பன அம்மூன்றும். மூன்றுமே தஞ்சையைச் சார்ந்தன. இவற்றுள் அம்பர், அம்பர் மாகாளம் இரண்டும் அருகருகேயுள்ள ஊர்கள். அம்பர் இன்றும் அம்பர் என்றே வழங்கப்படுகின்றது. தலமரம் புன்னையாக அமையும் இக்கோயில் கோச்செங் கட்சோழன் கட்டிய மாடக்கோயிலாகும். ! என்ற எண்ணம் கோயில் பழமையுணர்த்தும் ஒரு சான்றாகும். எனவே இதனை வைத்து சங்க காலம் சுட்டும் அம்பர் இன்று காணப்படும் அம்பர் இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கும் நாம் வரலாம். சங்க காலச் சான்றுகளை நோக்க கோயில் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, பின்னர் சோழன் கட்டிய கோயில் இங்கு உள்ளது என்பது பொருத்தமாகிறது. அரிசிலாற்றங் கரையில் உள்ள தனை,
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே ( நற் 141 )
காவிரி அணையும் தாழ்நீர் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன் ( புறம் 385 )
எனவும் இப்பாடல் காட்டும் தன்மை அரிசிலாற்றங் கரையில் உள்ளமையை உணர்த்துகின்றன. இதனை நோக்க அம்பர் நீர்த் துறையினுள் அமைந்த இடமாகத் தெரிதலையும், அப்பு நீரைக் குறிக்கும் பெயர் என்பதையும் நோக்க, நீரோடு இப்பெயர்த் தொடர்பு கொண்டமைந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. வண்டு என்பது வண்டர் என்று அமைந்தாற்போன்று, அம்பு என்ற சொல் அம்பர் என்று நின்றதோ எனவும் கருதலாம். இந்நிலையில் வேட்டுவர் தொடர்பானதாக இப்பெயர் அமையும். அம்பர், அம்பர் மாகாளம் என்ற இரு ஊர்களும் அடுத் தடுத்து அமைவதைக் காண, முதலில் அம்பர் என்ற ஊரிலேயே அம்பர் மாகாளமும் அமைந்து, பின்னர் அக்கோயிற் சிறப்பு காரணமாக அதனைத் தனித்து அம்பர் மாகாளம் எனச் சுட்டும் தன்மை அமைந்ததோ என்ற எண்ணமும், எழுகின்றது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. நாவுக்கரசரும் இவ்விறை வனைக் குறிப்பிடுகின்றார். ( பதி -30 / – 3 ) அம்பர் நகர் என்ற சேக்கிழாரின் கூற்று. ( 34529-4 ) அம்பர் தனிப்பகுதியாகச் சிறந்து விளங்கியது என்பதை யுணர்த்தவல்லது. கல்வெட்டும் அம்பர் நாடு என்று சுட்டுவது இணைத்து நோக்கத்தக்கது.