சோழ நாட்டில் அம்பர் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரை அடுத்து அம்பர் மாகானம் உள்ளது. “அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில் செங்கண் ணவன் கோயில் சேர்வரே” என்னும் தேவாரத்தின்மூலம் அரசலாற்றங்கரையில் அம்பர் மாநகர் அமைந்து இருந்தமையை அறிகிறோம். ஆற்றில் அக்கரையில் அமைந்த ஊர் என்னும் பொருள்பட அம்பர் என்ற பெயர் அமைந்திருக்கலாம். சுசீந்திரத்தில் பழையாற்றின் அக்கரையில் அமைந்த ஊர் அக்கரை என்றே பெயர் பெற்றிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது. அம்பர் என்னும் ஊர் அருவந்தை என்ற வள்ளலுக்கு உரியதாக இருந்தது என்பதை அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடிய புறநானூற்றுப் பாட்டு ஒன்று தெரிவிக்கிறது. புலவர் பெயர் ஊர்ப்பெயருடன் இணைத்துக் கூறப்பட்டதை போல வள்ளல் முதலியேரரின் பெயரும் ஊர்ப்பெயருடன் இணைத்துக்கூறப்பட்ட மரபும் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. சோழன் கிள்ளிக்குரிய அம்பரைச் சூழ்ந்து அரிசில் என்னும் ஆறு ஓடியதாக கூறும் சங்க இலக்கியப் பாடலும் அம்பர் என்ற ஊர் சோழ நாட்டினகத்ததே என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அம்பர் என்ற பெயருடன் மற்றும் ஓர் ஊர் ஜெய்ப்பூர் அரன் தலைநகராக இருந்துள்ளது. இவ்வூர் நம் சங்கஇலக்கியங்களில் குறிக்கப்பெற்ற அம்பா் இல்லை,
“ஏந்து கோட்டு யானை இசைவெங்கிள்ளி
வம்பு அணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம்தண் அறல் அன்ன இவள்
விரிஒலி கூந்தல் விட்டு அமைகலனே”
(நற், 141: 9.12)
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர்……”
(புறம், 385,8 10)