தனிமெய்யின் மாத்திரை அரை, உயிர்க்குறிலின் மாத்திரை ஒன்று;
உயிர்நெடிலின் மாத்திரை இரண்டு. ஆயின் உயிர் மெய்க்குறிலின் மாத்திரை
ஒன்று; உயிர்மெய் நெடிலின் மாத்திரை இரண்டு. நீர் தனித்து அளந்தபோதும்
நாழியாய் அரைநாழி உப்பைக் கலந்தபோதும் ஒன்றரை நாழியாய் மிகாதவாறு
போல்வது, ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் பெற வேண்டிய
உயிர்மெய்க் குறிலும் உயிர் மெய் நெடிலும் முறையே ஒரு மாத்திரையும்
இரு மாத்திரை யும் பெறும் நிலை. நீர் உப்பின் சுவையது ஆயினவாறு போல,
உயிர்மெய்யிலுள்ள உயிரும் மெய்க்குரிய வன்மை – மென்மை – இடைமை – என்ற
ஒலிகளைப் பெறும் என்பது. (தொ. எ. 10, 47 நச். உரை)