அன்பில் ஆலந்துறை

திருமாலயன் துறை, கீழம்பில், அல் பில் என்றெல்லாம் சுட்டப்படும் ஊர் இது. திருச்சி மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் அப்பர் இருவரும் இத்தலத்து இறைவனைப் பாடுகின்றனர்.
பிணைமா மயிலும் குயில் சேர் மடவன்னம்
அணையும் பொழில் அன்பின் ஆலந்துறை யாரே – திருஞா 33.
எனவும்,
நீருண் கயலும் வயல் வாளைவராலோ
டாரும் புனல் அன்பின் ஆலந்துறை யாரே திருஞா – 33-3
எனவும் பல இதன் இயற்கை வளம் பாடும் சம்பந்தர் பாடல்கள் ஊர்ப் பெயர்பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. எனினும் அன்பில் ஊர்ப்பெயர் என்பதும் ஆலந்துறை கோயிற் பெயர் என்பதும் தெரிகிறது. எனினும் அன்பில் என்ற ஊர்ப் பெயர்க்குரிய பொருளும் விளங்குமாறு இல்லை. எனவே இதனை மரூஉப் பெயராகக் கொள்ளலாமோ எனத் தோன்றுகிறது. மரூஉ என்றால் இச்சொல்லின் மரூஉவாக எது இருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. சங்க இலக்கியத்தில், இடங்களில் அழும்பில் என்ற பலர்ப் பெயர் ஒன்றைக் காண்கின்றோம். ( பத்து 344, அகம் 44, புறம் 283, சிலம்- 25-177 ) இதனை நோக்க அழும்பில் என்பது அம்பில் என்றுத் திரிந்து அன்பில் ஆகியிருக்கக் கூடுமா எனத் தோன்றுகிறது சோழநாட்டைச் சார்ந்தது அழும்பில் என்பது சங்க இலக்கியம் கொண்டு ஆய்வாளர் சுட்டும் உண்மை. இங்கும் அம்பில் திருச்சி மாவட்டத்திலேயே அமைகிறது. அடுத்து, புதுக்கோட்டைச் சீமையில் உள்ள அம்புக் கோயிலே அழும்பில் என்பார் ராபி. சேதுப்பிள்ளை. எனவே மேலும் பல சான்றுகள் கிடைப்பின் இவ்வூர் பற்றிய தெளிவு கிடைக்கலாம்.