அத்துச்சாரியை வரும் இடங்கள்

அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழனுருபொடு புணரு மிடத்தும்,
மகரஈற்றுப் பெயர்கள் உருபொடு புணருமிடத்தும், அழன் புழன் என்ற சொற்கள்
உருபொடு புணருமிடத்தும் இடையே அத்துச் சாரியை வரும்.
எ-டு : விள + அத்து + கண் = விளவத்துக்கண்; பலா + அத்து + கண் =
பலாவத்துக்கண் (தொ. எ. 181 நச்.); மரம் + அத்து + ஐ = மரத்தை (தொ.எ.
185 நச்.); அழன் + அத்து + ஐ = அழத்தை; புழன் + அத்து + ஐ = புழத்தை
(தொ.எ. 193 நச்.); எகின் + அத்து + ஐ = எகினத்தை (தொ.எ. நச்.
உரை)
இனி, பொருட்புணர்ச்சிக்கண், கலம் என்ற சொல்முன் குறை என்ற சொல்
உம்மைத்தொகைப்படப் புணருமிடத்து அத்துச்சாரியை இடையே வரக்
கலத்துக்குறை என முடியும். (தொ.எ. 168 நச்.)
மக என்ற பெயர் பொருட்புணர்ச்சிக்கண் மகத்துக்கை என அத்துச் சாரியை
இடையே பெறும். (தொ.எ. 219 நச்.)
நிலா என்ற சொல் நிலாஅத்துக் கொண்டான் என அத்துச் சாரியை பெறும்.
(தொ.எ. 228 நச்.)
பனி, வளி, மழை, வெயில், இருள், விண், மகர ஈற்று நாட்பெயர், ஆயிரம்
என்ற எண்ணுப்பெயர் என்னுமிவையும் இடையே அத்துச்சாரியை பெற்று
முடிவன.
எ-டு : பனியத்துச் சென்றான் – தொ.எ. 241 நச்.
வளியத்துச் சென்றான் – தொ.எ. 242 நச்.
மழையத்துச் சென்றான் – தொ.எ. 287 நச்.
வெயிலத்துச் சென்றான் – தொ.எ. 377 நச்.
இருளத்துச் சென்றான் – தொ.எ. 402 நச்.
விண்ணத்துக் கொட்கும் – தொ.எ. 305 நச்.
மகத்தாற் கொண்டான் – தொ.எ. 331 நச்.
ஆயிரத் தொன்று – தொ.எ. 317 நச்.