இறைவன் உறைகின்ற சுரங்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறும் திருநாவுக்கரசர், அத்தீச்சுரத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். ( பதி 285-8 ). அத்தனாகிய இறைவன் தங்கியிருக்கும் சுரம் என்ற பெயரில், அமைந்த கோயிற் பெயர். பின்னர் ஊர்ப் பெயராக அமைந்திருக்க வாய்ப்புண்டு. பொதிய மலையின் தொடர்பில் உள்ளது சிவசைலம் என வழங்குகிறது. ஈண்டு அத்திரிமுனிவர் பூசித்துப் பேறு பெற்றமையானும் அத்திரி முனிவர் ஆசிரமம் அம்மலையில் இருத்தலானும் அத்தீச்சுரம் எனலாயிற்று எனத்தேவாரலைப்புத் தல விளக்கம் ( பக் -17) இதற்குப் புராணச் சார்பு காட்டுகிறது.