திருவதிகை என தென்னார்க்காடு மாவட்டத்தில் அமையும் ஊர். இது திருவதி என்றும் திருவீதி என்றும் கூட வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. அதிகமான் தொடர்பு காரணமாக அமைந்த ஊர் என்பது பெயரில் மட்டும் அல்லாது பிற சான்றுகளாலும் தெளிவுபடுகிறது. அடியார்கள் பலரின் மனத்தையும் கவர்ந்தது இவ்வூர் என்பது பலரும் இங்குள்ள இறையைப் பரவும் தன்மை உணர்த் தும் நிலை. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப்பதிகங்களுடன் பெரிய புராணத்திலும் பதினோராம் திருமுறையிலும் கலிங்கத்துப் பரணியிலும் ( 299 ) இவ்வூர் பற்றிய எண்ணங்கள் அமைகின்றன. அதிகை எனவே பல இலக்கிய வழக்குகளிலும் அமைய. நாவுக்கரசர் அதியரையமங்கை அமர்ந்தானை எனப்பாடும் நிலை அமைகிறது. ( பதி 217.296 ) சிவபெருமான் திரு விரட்டை மணி மாலை அதிகை மங்கை என்ற பெயரைத் தருகிறது ( 12 ). கல் வெட்டுகளில் இப்பெயர் அதியரைய மங்கலம். அதிராச மங்கலம் அதிராச மங்கலியபுரம் என வழங்கப்பட்ட நிலையையும் காண்கிறோம். மணவிற் கூத்தனான காலிங்கராயன் இக்கோலுக்குப் பொன் வேய்ந்து இறைவியார் எழுந்தருளி இருக்கும் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. இவற்றை நோக்க அதியரையமங்கலம் என்ற பெயரே இதன் பழம் பெயர். பின்னர் அது எளிமைப்படுத்தப்பட்டு, அதியரைய மங்கை, அதிமங்கை என்றாகி அதிகை என்று நிலைபெற்றதோ எனத் தோன்றுகிறது. மங்கலம் என்ற பொதுக் கூறு பற்றிப் பேசும்போது கி. நாச்சிமுத்து, இது குடியிருப்பினை உணர்த்தும் சொல் ; வடமொழிச் சொல் எனக் குறிப்பிடுவர். அதியமான் பெயர்த்தொடர்பாக, அம்மன்னர் மரபுத் தொடர்பாக அமைந்தது இப்பெயர் என்பதற்குப் பிறர் பலரின் கருத்தும் அரணாக அமைகிறது. அதிக சங்க காலத்தில் பெரிய வீரனும், ஒளவை முதலியோர் அருமையாகப் பாராட்டப் பெற்றவனுமாகிய மான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலின் வரலாறு பலரும் நன்கு அறிவர். இவ்வதிகமான் வமிசத்தவர்களைப் பற்றிய சாசனங்கள் சில நமக்குக் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டுத் தாலுகாவில் உள்ள தர்மபுரி என்றுள்ள ஊரே இவரது தலைநகரம். இத்தர்மபுரியை அடுத்துள்ள அதமன் கோட்டை அதியமான் கோட்டையாகும். இவரை அதிராசன், அதியரையன் அதியேந்திரன் எழினியவனிகா என்று சாசனங்கள் வழங்கும் எனவும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ளதும் அதிராசமங்கலம் அதியரையன் மங்கலம் என்பதன் மரூஉவாய்ச் சாசனங்களில் வழங்குவதுமாகிய அதிகை என்ற தலம் இவ்வரசர்களால் பெயர் பெற்ற மலரேயாகும் எனவும் கூறுகின்றார் மு. இராகவையங்கார். அதிகமான் வாழ்ந்த இடமே இவ்வூர் என்பது தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எண்ணம். எனவே அதியமான் என்ற பெயர்த்தொடர்பாகத் தோற்றம் பெற்ற ஊர்ப்பெயர் இது என்பது தெளிவு. இலக்கியப் பயிற்சிகள் அனைத்தும் இங்குள்ள இறையைப் புகழ்வதுடன், இவ்வூர் பற்றிய சில எண்ணங்களையும் தருகின்றன. கொடில நதிபாயும் இதன் சிறப்பை, கெடில வடகரைத்தே யெந்தை வீரட்டமே என்று இயம்புகின்றார் நாவுக்கரசர் ( 105 ) மேலும் தென்றிசைக் கெங்கை எனவும் இந்நதி சுட்டப்படுகிறது ( திருஞா பதி 10- 2 ). சேக்கிழார், செய்தவ மாதவர் வாழும் திருவதிகை என்ற நிலையில் இங்குப் பிறத்தல் சிறப்பு என்பதைச் சுட்டுகின்றார். மேலும் அதிகை மூதூர் (திருநா. பதி 15-3 ), அதிகை மாநகர் என்ற எண்ணங்கள் இவ்வூரின் பழமையையும், பெருமையையும் எடுத் தியம்பும் நிலையில் அமைகின்றன.