அதிகாரம் – முறைமை (தொ. எ. 1. நச். உரை)
அதிகாரம் – அதிகரித்தல். வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல்
பலசூத்திரங்களொடு சென்றியைதலையும், ஒன்றன் இலக்கணம் பற்றி வரும்
பலசூத்திரத் தொகுதியையும் அதிகாரம் என்ப. (தொ. சொ. 1 சேனா. உரை)
அதிகாரம் அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று,
வேந்தன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச்
செய்வது போல, ஒருசொல் நின்றுழி நின்று பலசூத்திரங்களும் பல
ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது. மற்றொன்று, சென்று
நடாத்தும் தண்டத்தலைவர் போல, ஓரிடத்து நின்ற சொல் பலசூத்திரங்களொடு
சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிப்பது. இவற்றை முறையே வடநூலார்
யதோத்தேச பக்கம் எனவும், காரியகால பக்கம் எனவும் கூறுப. (சூ. வி. பக்.
17) (நன். 56 சிவஞா).
எ-டு : எழுத்துப் பற்றிவரும் பலசூத்திரங்களின் தொகுதி
எழுத்ததிகாரம் எனப்பட்டது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 34ஆம் சூத்திரத்தி லுள்ள ‘நிற்றல்
வேண்டும்’ என்ற தொடர் ‘குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்து
நிற்றல் வேண்டும்’ என்று
சென்றியைந்து தன் பொருளைப் பயப் பிப்பது அதிகாரத்தான்
வந்ததாகும்.