அதாஅன்று என்ற சொல்லமைப்பு

அது என்ற நிலைமொழி அன்று என்ற வருமொழியொடு கூடுமிடத்து நிலைமொழித்
துகரம் ‘தா’ எனத்திரிய, அதாஅன்று என முடியும். (தொ. எ. 258 நச்.)
அதாஅன்று என்பது அதுவன்றி என்னும் பொருளது. அன்றி என்ற வினையெச்சம்
அன்று எனத்திரிந்ததோ எனக் கருத வேண்டியுள்ளது. இதனால், இன்றி என்பது
இன்று எனத் திரிவது போல, ஒரோவழி அன்றி என்பதும் அன்று எனத் திரிதலும்
பெறப்படும்.
அது இது உது என்பன மூலத் திராவிட மொழியில் அத் இத் உத் என
மெய்யீற்றுச் சொற்களாக இருந்தன. அது இது உது என்பன வட மலையாளத்தில்
போலவே, தமிழிலும் அத இத உத எனச் சிலவிடங்களில் வழங்கியிருத்தல்
கூடும். அகரஈற்றின் முன் அகரம் வரின், ஒருசொல் நீர்மையில் இவ்விரண்டு
அகரமும் ஓர் ஆகாரமாகி வழங்கும். ஆதலின் அத + அன்று = அதான்று என்று
வந்தது. மர + அடி = மராடி என்றாவது போல்வது இது. வருமொழி ‘அன்று’
என்பதைத் தெரிவிக்க, அதாஅன்று என்று அகரம் அறிகுறி என்ற அளவில் எழுதப்
பட்ட தாகும். (எ. ஆ. பக். 143)