உரையாசிரியன்மார் எல்லாம் ‘மகன்வினை கிளப்பின்’ என்று பாடம்
ஓதினர். மகனது வினையைக் கூறுமிடத்து வல் லெழுத்து மிகும் என்று பொருள்
கூறி, ‘மகன்றாய்க் கலாம்’ என எடுத்துக்காட்டி, மகன் தாயொடு கலாய்த்த
கலாம்- என்று பொருள் கூறினர்.
மகன் வினையே அன்றி, ‘மகள் தாய்க் கலாம்’ என மகள் வினை கிளப்பினும்,
வாளா ‘தாய்க் கலாம்’ எனவே கிளப்பினும், வல்லெழுத்து மிகுதல் ஆம்;தாய்
என்பது விரவுப்பெயர் ஆதலின், மகவு – பிள்ளை – என அஃறிணைச் சொற்களைக்
கூட்டிக் கூறினும், இவ்விதி பொருந்தும். ஆதலானும் ‘மகன்’ என வரைந்து
கூறுதல் குன்றக் கூறலாம். அன்றியும், வல் லெழுத்து மிகுதற்கு மகன்
என்னும் சொல் எவ்வாற்றானும் ஏதுவாகாமையும் காண்க. ‘அதன்வினை’ என்பது
‘முதனிலை’ என்னும் சீரொடு பொழிப்பெதுகை பொருந்தி யாப்பிசை சிறந்து
நிற்றலும் காண்க. (தொ.எ. 359 ச.பால.)