இடைக்காலத்தில் பெரும் புகழ்பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணங்கள் இதற்கு முன்பு இல்லை. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், போன்றோரால் பாடப்பட்டப் பெருஞ்சிறப்பு டைய இத்தலம் இன்று வரை பெருமை குன்றாது சிறப்புடன் திகழ்கின்றது. ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள இவ்வூர், உயர்ந்ததொரு மலையையும் கோயிலையும் தன்னுட் கொண்டு திகழ்கிறது. வட பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி காண இயலாத நிலையில், அழலுருவாக நிற்கின்றான் சிவன், விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டதை மெச்சி அவருக்குத் தன் அடியையும் முடியையும் காட்டுகிறார். அதற்காக அழல் உருவில் இருந்த இறைவன் மலையுருவில் குறுகுகிறார். அப்படிப் பொங்கழல் உருவினனாக இருந்த இறைவனே அண்ணாமலையானாக மாறி நிற்கிறார் என்று தலபுராணம் கூறும் வரலாறு அண்ணாமலை இறைவன் மேற்கொண்ட பக்தியின் வெளிப்படை சான்றாக அமைகிறது. இதனைத் தவிர்த்து, இங்குள்ள உயர்ந்த மலையையும் கோயிலையும் கொண்டு மேலும் இப்பெயரை ஆராயின், அண்ணன் – உயர்ந்தோன் என்ற நிலையில் உயர்ந்தவனாகிய றைவன் மலை இருக்கும் மலை என்ற பொருளையும், ( அண்ணாந்து ) உயர்ந்து பார்க்கும் அளவிற்கு உயரிய என்ற பொருளையும் கொண்டு நோக்க உயர்ந்த மலை காரணமாகவும், உயர்ந்த மலையினை இடமாகக் கொண்டிருப்பவன் என்ற நிலையிலும் இப்பெயர்த் தோற்றம் பொருத்தமுறும் போல் தோன்றுகிறது. சேக்கிழார் தம் பெரிய புராணத்தில்,
அண்ணாமலை அங்கு அமரர் பிரான்
வடிவு போல் தோன்றுதலும் ( 34-970 )
என்று இறைவனின் உயர்வுக்கு ஒப்பிடுகின்றார் ; மேற் சுட்டிய புராணக்கதை இக்கருத்தினின்றும் புனையப்பட்டதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் அருணாசல புராணம். அருணைக்கலம்பகம் என்ற நூற்பெயர்களில் அருணாசலம் இம்மலை குறித்து வழங்குவதே. அண்ணாமலைக்குரிய வடமொழிப் பெயர்ப்பாக அருணாசலம் அமைகிறது. இவ்வூர் பற்றிய எண்ணங்களை இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. முதல் இராஜேந்திரன் காலத்தில் ( 1038 ) திருவண்ணாமலை என்று குறிப்பிடப்பட்ட இவ்வூர் பின்னர் இராஜராஜ தேவர் காலத்தில் அண்ணா நாட்டுத் தளியூர் என்று வழங்கப்பட்டு உள்ளதைக் காணுகின்றோம். அண்ணாமலை என்னும் பெயர் மக்கள் தொகை அதிகரித்து பெரும் ஊராக மாறியது காரணமாக அண்ணா நாடு என்று சுட்டினரோ எனத் தோன்றுகிறது. மேலும் அரசியல் காரணமாக அரசனால் சூட்டப்பட்ட இப்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெறவில்லை என்ற எண்ணம், அண்ணாமலை என்ற பெயரே இன்றுவரை செல்வாக்குடன் திகழும் நிலையைக் காண எழும் ஒன்றாக அமைகிறது.