‘அளபெடை அசைநிலை யாதல்’ காண்க.சீர்நிலை எய்திநின்ற அளபெடைகள் அசைநிலையாதலும் உண்டு. இயற்கையளபெடைஅசைநிலையாதல் செய்யுட்கே உரியது. புணர்ச்சிவகையான் எழுத்துப்பேறாகியஅள பெடையும் பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கை அளபெடைகள்சிலவும் அசைநிலை ஆதலும் உரிய.எ-டு : ‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’ (யா.கா. 38 மேற்.)என்புழி, அளபெடை சீர்நிலை எய்தின் வெண்பாச் சிதையும் ஆதலின்,பண்டமாற்றின்கண் இயற்கை அளபெடை அசைநிலை யாயிற்று.‘பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன் என்புழி, ‘பலாஅ’என்பதன்கண் எழுத்துப்பேறளபெடை சீராகாது அசையாயிற்று.‘கலம்போஒய்ப்போஒய்க் கவ்வை செய’ என்புழி,வெண்பா ஈற்றடியில் அளபெடை செய்கைக் குறிப்புப் புலப்பட வந்தது.அளபெடை சீராயின் வெண்பாச் சிதையும்.(செய்கைக்குறிப்பு – ஒரு செயல் பலகால் நிகழ்தல்). (தொ. செய். 17நச்.)