யரழக்களின் முன் மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துக் களும்
ஙகரமும் மயங்கும் என்ற செய்தியில், ஙகரத்தை உயிர் மெய்யாகக் கொண்டு,
வேய்ஙனம் – வேர்ஙனம் – வீழ்ஙனம் என்று உதாரணம் காட்டுவர். ஙனம் என்ற
சொல்லைத் தொல்காப்பியனார் குறிப்பிடவில்லை. யரழ முன்னர் ஙகரம்
மயங்குதற்கு வேய்ங்குழல் – ஆர்ங்கோடு – பாழ்ங்கிணறு என்பனவே தக்க
உதாரணமாம். இவற்றை ஈரொற்றுடனிலைக்கு உதாரணமாகக் கோடல் கூடாது.
ஈரொற்றுடனிலை ஒரு மொழிக்கண்ணது. அதற்கு எடுத்துக் காட்டுத் தேய்ஞ்சது,
மேய்ந்தது, சேர்ந்தது, வாழ்ந்தது முதலியனவாக ஒருமொழிக் கண் வருவனவாம்.
தொல்காப்பியனார் காலத்தில் ஙகரம் முதலாய் வரும் சொல் தமிழில் இல்லை;
ஆங்கனம், ஈங்கனம், ஊங்கனம், யாங்கனம், என்ற சொற்களே உண்டு. ஆங்ஙனம்,
ஈங்ஙனம், ஊங்ஙனம், யாங்ஙனம் – அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்
என்பன பிற்காலத்தில் திரிந்து வழங்கிய சொற்களே.
ஙகரம் தன் முன்னர்த் தான் மயங்குவதற்குப்
‘பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும்
உரைத்தனரே’
(கலி. 11:9) என்பது போன்ற
ஒற்றளபெடையே உதாரணமாம்.
(எ. ஆ. பக். 26 – 29)
யாங்கனம் – நற். 381 – 6
புறநா. 8-6, 30-11, 39-13, 49-3 மணி. 5 : 41
ஆங்கனம் – தொ. பொ. 358-1; மலைபடு. 402; கலி. 28 : 21; சிலப். 7
: 47 – 1; மணி. 2 : 58; 3 : 26; 11 : 36, 122; 16 : 104, 128; இறை.
கள. 3 – 1; 5 – 1
ஈங்கனம் – குறுந் 336 – 2; புறநா. 208 – 4
அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் – சீவக 1359 (முதலியன).
இவையும் ‘தங்கிய’ என்ற ஈற்றடி எதுகையை நோக்க, அங்கனம் முதலாக
இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆங்ஙனம் : இதனை ஆ + கனம் என்று பிரிப்பின் பொருளின்று. ஆங்கு +
அனம் என்று பிரித்தால், அனம் என்பது தனம் என்பதன் மரூஉவாய், ஆங்ஙனம்
என்பது அப்படிப்பட்ட தன்மை என்னும் பொருளில் முதற்கண் வழங்கிப் பின்னை
அத்தன்மை என்னும் பொருளில் அமைவதாயிற்று. நன்கனம் – செவ்வனம் –
என்பனவற்றை நோக்கின், நிலைமொழியோடு அனம் என்பதுவே சேர்ந்துள்ளது
என்பது புலப்படும்.
ஆங்கனம் முதலியவை பிற்காலத்தில் ஆங்ஙனம் – அங்ஙனம் – முதலாகத்
திரியவே, “சுட்டுக்கள் – யாவினா – எகரவினா என்பனவற்றை அடுத்து ஙகரமும்
மொழிக்கு முதலாகும்” என்று நன்னூலார் குறிப்பிடுவாராயினார். (தி. மொ.
மூ. பெ. பக். 118).