பொருட்புணர்ச்சிக்கண், ஊகார ஈற்று ஊ என்னும் பொருட் பெயர் னகரச்
சாரியையோடு அக்குச்சாரியை பெறுதலு முண்டு.
ஊ + ன் + அக்கு + குறை = ஊனக்குறை – எனவரும். (தொ. எ. 269
நச்.)
மகரஈற்று ஈம் – கம் – என்ற பெயர்கள், நாற்கணமும் வருமொழி முதற்கண்
வரின், தொழிற்பெயர் போல முன்பு பெற்ற ஈமு – கம்மு – என்ற நிலைமொழித்
தொழிலாகிய உகரம் கெட்டு, ஈம்+அக்கு + நெருப்பு = ஈமநெருப்பு, கம் +
அக்கு + சாடி = கம்மச் சாடி எனப்புணரும். (தொ. எ. 329)
ழகரஈற்றுத் தாழ் என்ற பெயர் கோல் என்ற வருமொழி யொடு புணருமிடத்து
இடையே அக்குச்சாரியை வரும். தாழ் + அக்கு + கோல் = தாழக்கோல். இது
தாழைத் திறக்கும் கோல் எனப் பொருள்படும். (தொ. எ. 384)
தமிழ் என்ற ழகரஈற்றுச் சொல்லும், நாற்கணமும் வருமொழி யாகப்
புணருமிடத்து வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறும். தமிழ்
+ அக்கு + சேரி = தமிழச்சேரி; தமிழ் + அக்கு + நாடு = தமிழநாடு.
(தொ.எ. 385)
மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாத சில குற்றியலுகர ஈற்றுப்
பெயர்முன் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருமொழி நிகழின், அக்குச்சாரியை
வருதலுமுண்டு. குன்று + அக்கு + கூகை = குன்றக் கூகை; மன்று + அக்கு +
பெண்ணை = மன்றப் பெண்ணை. (தொ.எ. 418)
உருபுபுணர்ச்சிக்கண் அக்குச் சாரியை பெறுமாறு இல்லை.