அக்கரை

சங்க காலத்தில் அறிய இயலாத இவ்வூர், தேவாரப் பாடல் பெற்றது. மா. இராசமாணிக்கம் சம்பந்தப் பெருமான் பாடல் பெற்றது ஆகையால் இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை என்பார் கண்ட இவ்வூர்ப் பெயரே அதன் காரணத்தைச் சொல்லுமாறு அமைகிறது. அந்தக்கரை என்ற குறிப்பினை நாம் இதனுள் காண்கின்றோம். மேலும் மேற்குறித்த அறிஞர், தான் சென்று இவ்வூர்ப் பற்றி எழுதும்போதே இப்பெயர்க்கான உண்மையையும் அறிய இயலுகிறது. வண்டி வழியில் இரண்டு சிற்றாறுகளைக் கடந்து ஆற்றங்கரை மீது நின்றது. நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள திருவக்கரையை அடைந்தோம் என்னும் இவர், மேலும் திருவக்கரை மிகச் சிறிய கிராமம். அங்கு நான்கு அல்லது ஐந்து தெருக்களே உண்டு. ஆற்றைக் கடந்து கோயிலை அடையும் பாதை நெடுக அழிந்த கற்சிலைகளின் பகுதிகளும் கற்பாறைகளும், கற்சிலைகளும், மரம் கற்பாறைகளும் சிதறிக் கிடக்கும் காட்சி திருவக்கரை பழைமையும், பெருமையும் பெற்றிருந்த சிவ தளி என்பதை அறிவிப்பது போல் காரணப்பட்டது என்று கூறிச் செல்லும் நிலை, இவ்வூரின் சிறப்பை விளக்க வல்லது. மட்டு மன்றி, ஆற்றுக்கு அந்தப் பக்கம் காரணமாக அக்கரை என்று சொல்லும் வழக்கம் முதலிலேயே இருந்திருக்கலாம். பின்னர், பக்தி இயக்க காலத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த அல்லது அக்காலத்தில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் பெருமை பெற. இவ்வூர்ப் பெயர் சிவத் தலமாக விளக்கம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் இவ்வறிஞர் காட்சியறிவின் படி, இத்தலம் சிவன் கோயிலுடன் பிற தெய்வ வணங்கங்களும் கொண்டு திகழ்ந்திருக்கிறது என்பதையும் அறிய இயலுகிறது. ஆற்றுக்கு அந்தப்பக்கம் என்ற பொருளில் அக்கரை என்று ஊர்ப்பெயரை வைத்தல் தமிழரிடம் மரபாகத் திகழ்ந்த ஒன்று என்பதுடன் இன்றும் அவ்வழக்கினைச் சுசீந்திரம் ஊரில் உள்ள அக்கரை ( சுசீந்திரம் ஊரில் ஆற்றிற்கு அந்தப் பக்கம் உள்ள ஊர் ) யால் உணரலாம்., பல வகைப்பட்ட சிற்பங்கள், கோயில்கள் கொண்டு இதனைச் சிறந்த சிற்பக் கூடம் என்பர்.1 பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் திருவக்கரையை அடைந்த தன்மையைச் சேக்கிழார் பாட, (திருஞா. 963, 964) ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் ( பதிகம் -318) இவ்வூர் சிறப்பினைத் தருகின்றது. அவர் காலத்தில் இத்தலத்தில் உள்ள மற்ற தெய்வங்களைவிட, சிவனே மிகவும் பெருமையுடன் திகழ்ந்து இருக்கலாம் என்ற எண்ணத்தையும் நாம் இங்குப் பெறுகின்றோம். சோழ நாட்டு ஊரான இது ? இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான் பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ண மர்ந்தான் மறையவன தன் தலையில் பலிகொள்பவன் வக்கரையில் உறைபவன் எங்கள் பிரான் ஒலியார் கழல் உள்குதுமே திருஞா. பா -1 திருவக்கரை என்றே. இப்பெயரினையே எல்லோரும் சுட்டினாலும் இப்பெயராய்வினைச் செய்யும்போது திரு + அக்கரையே இணைந்து திருவக்கரை ஆகியிருக்க வேண்டும் என்பது தெளிவுறுகிறது.