அகரம் ஏனைய முதலெழுத்துக்களொடு சிவணுதல்

தனிமெய்களின் நடப்பு அகரத்தொடு பொருந்தி நடக்கும். ‘வல்லினம் க் ச்
ட் த் ப் ற்’ என்னாது, ‘வல்லினம் க ச ட த ப ற’ என்றே கூறுதல் போல்வன
இதற்கு எடுத்துக்காட்டு. எனவே, தனிமெய்களை நாவால் கருத்துப்பொருளாக
இயக்கும் இயக்கமும் கையால் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும்
இயக்கமும், அகரத்தொடு பொருந்தி நடக்கும் என்றவாறு.
இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு போல ஏனைய
பதினோருயிர்க்கண்ணும் அது கலந்து நிற்கும். இறைவன்
இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண் ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின்
தன்மையாய்க் கலந்து நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல்,
அகரமும் ஏனை உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற் றின்
தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது.
இஃது ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று வள்ளுவர் உவமை கூறியமையானும்,
கண்ணன் “எழுத் துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” எனக் கூறியவாற்றா னும்
உணரப்படும். (தொ. எ. 46 நச். உரை)
“எழுத்துக்களில் அகரம் ஆகின்றேன் யானே” என்று கண்ணன் கூறிய
தொடருக்கு, “என்னை ஓரெழுத்தாகத் தியானிக்க வேண்டுமாயின், அகரமாகத்
தியானிக்க வேண்டும்” என்பதே கருத்து. ‘அகர. . . . . உலகு’ என்ற
விடத்துக் கடவுள் உலகிற்கு எவ்வாறு முதற்காரணமோ, அவ்வாறு
எழுத்துக்களுக் கெல்லாம் அகரம் முதற்காரணம் என்று கொள்ள வேண்டா;
கடவுளும் அகரமும் முறையே உலகத்திற்கும் எழுத்திற்கும் முதன்மையாய்
இருத்தலின், முதன்மையே பொதுத் தன்மை யாகக் கொள்ளல் தகும். (எ. கு.
பக். 56)