அகப்புறச் செய்கை

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. இது நிலைமொழியீறு பெறும் முடிவைக்
கூறாது நிலைமொழியீறு பெற்றுவரும் எழுத்து முதலியவற்றின் முடிவு
பற்றிக் கூறும் புணர்ச்சி யிலக்கணம் பற்றிய நூற்பாக்களின் இயல்பைச்
சுட்டுவ தாகும்.
அது, புள்ளியீற்றுள் உகரம் பெறும் என்று விதித்த ஞ – ண – ந – ம – ல
– வ – ள – ன – என்ற எட்டு ஈறுகளும் வருமொழி முதலில் யகரமோ உயிரோவரின்,
அவ்வுகரம் பெறா என்று விலக்குவது போல்வது.
‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை’
(தொ. எ. 163.
நச்.)
எ-டு : உரிஞுக்கடிது என உகரம் பெறும் ஞகரஈறு, அவ்வுகரம் பெறாமல்
உரிஞ் அனந்தா என்றாற்போல வருவது. இஃது ஈறறெழுத்தின் விதி ஆகாது,
ஈற்றெழுத்துப் பெற்றுவரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின், அகப்புறச்
செய்கை ஆயிற்று.
நகரஈறு உகரம் பெறும் என்பதனை விலக்கி, வேற்றுமைக்கண் உகரம் கெட
அதனிடத்து அகரம் வரும் (பொருநுக்கடிது – பொருநக் கடுமை) (தொ. எ. 299)
என்றாற் போல்வனவும், குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரமாகிய எழுத்துப்
பேறளபெடை பெறும் (226) என்பதனை, இராக்காலத்தைக் குறிக்கும் இரா என்ற
சொல் வேற்றுமையில் பெறாது (227) என்று விலக்குதல் போல்வனவும்,
நிலைமொழியீறு பற்றி அமையாமல் ஈறுபெறும் எழுத்துப் பற்றி அமைதலின், இவை
பற்றிய நூற்பாக்கள் அகப்புறச் செய்கையன வாம். (தொ. எ. 1 நச். உரை)