நாத தத்துவமாக எழுந்து மூலாதாரம் முதல் ஆஞ்ஞை ஈறாக அகத்தே
திரிதரும் ஓசை. தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூவகையான இடங்களில்
நின்று ஓசைக்காற்றினால் எழும் எனப்பட்ட எல்லா எழுத்துக்களையும் பல் –
இதழ் – நா – மூக்கு – அண்ணம் – எனப்பட்ட ஐவகை உறுப்புக்களின் இடமாகக்
கிளந்து அவ்வவற்றின் பிறப்பு இயல்புகளொடு செவிப்புலனாக
வெளிப்படுத்துமிடத்து, அகத்து எழுகின்ற வளிஇசை ஒன்றற் கொன்று
முரண்பட்டு வருதலைக் குற்றமற ஆராய்ந்து மாத்திரையான் அளவிட்டு
மேற்கோடல், நிறைமொழி மாந்தராகிய அந்தணரது மந்திரநூலின்கண்ணது.
இயற்றமிழ் எழுத்துக்களுக்கு இலக்கணம் கூறும் இந்நூலில் அதனைக்
கூறாமல், புறத்துச் செவிப்புலனாக எழுந்து தம் உருவம் தோன்ற இசைக்கும்
எழுத்தோசைகளின் அளவையே தாம் கூறியுள்ளதாகத் தொல்காப்பியனார்
குறித்துள்ளார்.
யோக நிலையில் அமர்ந்த முனிவர் மன்பதை உய்யும் பொருட்டு அகத்தெழு
வளியிசையை உருவேற்றுவர். அம் மந்திர ஒலிகள் இடத்திற்கு ஏற்ப மாத்திரை
வேறுபடும். அவைதாமும் அவர் அகச்செவிக்குள் புலனாம். (தொ. எ. 102 ச.
பால.)