அகக்கருவி

எழுத்ததிகாரம் குறிப்பிடும் புணர்ச்சியாகிய செய்கைக்கு உதவும்
கருவி வகைகள் நான்கனுள் அகக்கருவி என்பதும் ஒன்று.
எழுத்துக்களின் இலக்கணமும் மொழியின் இலக்கணமும் தொன்றுதொட்டுப்
புணர்ச்சிக்குக் கருவியாதலின், நிலை மொழி வருமொழிப் புணர்ச்சிக்கண்
நிலைமொழியீறும் வருமொழிமுதலும் அத்தொடரின் அகத்தே அமைதலின்,
நிலைமொழியீற்றெழுத்தைப் பற்றிய விதிகளைக் கூறும் நூற்பாக்களும்
வருமொழி முதலெழுத்தைப் பற்றிய விதி களைக் கூறும் நூற்பாக்களும்
அகக்கருவியாகும்.
‘எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா’ (தொ. எ. 272) என்பது நிலைமொழியீறு
பற்றியது.
‘அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதல் ஆகி // உளவெனப்
பட்ட ஒன்பதிற் றெழுத்தே; // அவைதாம், // கசதப என்றா நமவ என்றா // அகர
உகரமோடு அவையென மொழிப’
(தொ. எ. 170) என்பது வருமொழி முதல்
பற்றியது.
(தொ. எ. 1 நச். உரை)