அஃறிணை விரவுப்பெயர்

உயர்திணை அஃறிணை என்ற இருதிணைக்கும் பொதுவான சாத்தன் முதலிய
பெயர்கள் விரவுப்பெயர்களாம். இவை உயர்திணையைச் சுட்டுமிடத்து உயர்திணை
விரவுப்பெயர் எனவும், அஃறிணையைச் சுட்டும்போது அஃறிணை விரவுப் பெயர்
எனவும் பெயர்பெறும். எ-டு :
சாத்தன் வந்தான் – உயர்திணை
விரவுப்பெயர்;
சாத்தன் வந்தது – அஃறிணை
விரவுப்பெயர். இஃது ஒருசாரார் கருத்து.
சாத்தன், சாத்தி, முடவன், முடத்தி – என வரும் விரவுப் பெயர்க்கண்
உயர்திணைக்கு உரியவாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற
ஈற்றெழுத்துக்களே, அஃறிணை ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தின எனல்
வேண்டும். அஃறிணைக்கு ஒருமைப் பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறுகள்
அன்றி, ஆண்பால் பெண்பால்களை உணர்த்தும் ஈறுகள் இல்லை. ஆதலின், அஃறிணை
விரவுப்பெயர் என்பது, ‘உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர்’ என
விரவுப்பெயரின் உண்மைத்தன்மைத் தோற்றம் கூறியவாறு. தொல்காப்பியனார்
‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றே மூன்றிடங்களில் (எ. 155, 157; சொ. 173)
குறிப்பிட்டுள்ளார், ‘உயர்திணை விரவுப்பெயர்’ என்று அவர் யாண்டும்
சுட்டா மையே, ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்பது உயர்திணை விரவுப்பெயர்க்கு
இனத்தைக் குறித்தது என்பது பொருந்தாமையைப் புலப்படுத்தும். இவ்வாறு
உரைப்பார் நச்சினார்க் கினியர். (தொ. எ. 155)