அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று து று டு என்னும் ஈற்றான் வரும்.அவற்றுள், து முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; று இறந்தகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும்; டு வினைக்குறிப்பு ஒன்றற்கேவரும்.எ-டு : நடந்தது – நடவாநின்றது – நடப்பது, அணித்து; கூயிற்று,அற்று ; பொருட்டு – குண்டுகட்டு.தகரஉகரம் இறந்தகாலத்து வருங்கால், புக்கது – உண்டது – வந்தது -சென்றது – போயது – உரிஞியது – எனக் கடதற வும் யகரமும் ஆகியஉயிர்மெய்ப் பின் வரும். போனது என்பது சிதைவுச்சொல்.நிகழ்காலத்தின்கண், நடவாநின்றது – நடக் கின்றது – உண்ணாநின்றது -உண்கின்றது – என நில் கின்று என்பவற்றோடு அகரம் பெற்று வரும்.எதிர்காலத்தின்கண், உண்பது – செல்வது – எனப் பகரமும் வகரமும் பெற்றுவரும்.றகரஉகரம், புக்கன்று உண்டன்று வந்தன்று சென்றன்று – எனக் கடதறஎன்பனவற்றின் முன் ‘அன்’ பெற்று வரும்; கூயின்று, கூயிற்று -போயின்று, போயிற்று – என ஏனையெழுத்தின் முன் ‘இன்’ பெற்று வரும்.வந்தின்று என்பது எதிர்மறை வினை.டகரஉகரம், குறுந்தாட்டு – குண்டுகட்டு – என வரும்.(தொ. சொ. 217 சேனா. உரை)