அஃறிணைப் பலவின்பால் வினைமுற்று அ ஆ வ – என்னும் விகுதிகளான்அமையும். அகரம் மூன்று காலமும் பற்றி வரும். ஆகாரம் எதிர்மறைவினையாய்மூன்று காலத்துக்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும்.வகரம் தனித்தும் உகரம் பெற்றும் வரும்.அகரம் இறந்தகாலம் பற்றி வருங்கால், க ட த ற என்னும் நான்கன்முன்னும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; ஏனை யெழுத்தின் முன் ரகாரழகாரம் ஒழித்து ‘இன்’ பெற்று வரும்; நிகழ்காலத்தில், நில் – கின்று -என்பனவற்றோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்; எதிர்காலத்தில்பகரத்தொடும் வகரத்தொடும் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும்.எ-டு : தொக்கன, தொக்க ; உண்டன, உண்ட ; வந்தன,வந்த; சென்றன, சென்ற – எனவும், போயின , போய – என வும், உண்ணாநின்றன,உண்ணாநின்ற; உண்கின்றன, உண்கின்ற – எனவும், உண்பன, உண்ப ; வருவன, வருவ- எனவும் வரும்.உரிஞுவன, உரிஞுவ – என உகரத்தோடு ஏனை எழுத்துப்பேறும் ஏற்றவழிக்கொள்ளப்படும். வருவ, செல்வ – என்பன அகர ஈறு ஆதலும் வகர ஈறாதலும்உடைய.ஆகாரம் காலஎழுத்துப் பெறாது உண்ணா தின்னா – என வரும். வகரம்,உண்குவ தின்குவ – என எதிர்காலத்துக்கு உரித்தாய்க் குகரம் அடுத்தும்,ஓடுவ பாடுவ – எனக் குகரம் அடாதும் வரும். உரிஞுவ திருமுவ – என உகரம்பெறுதலும் ஏற்புழிக் கொள்ளப்படும். (தொ. சொ. 216 சேனா. உரை)