அஃறிணைக் குறிப்புமுற்று

இன்று இல உடைய அன்று உடைத்து அல்ல உளது உண்டு உள – என்னும்சொற்களும், பண்புகொள் கிளவி – பண்பி னாகிய சினைமுதற் கிளவி – ஒப்பொடுவரூஉம் கிளவி – முதலி யனவும் அஃறிணைக் குறிப்புமுற்றுக்களாம்.உண்டு என்பது உண்மையையும் பண்பையும் குறிப்பையும் உணர்த்தும்.எ-டு : ஆ உண்டு: உண்மைத் தன்மை. இது ‘பொருண்மை சுட்டல்’எனப்படும்.உயிருக்கு உணர்தல் உண்டு: பண்புஇக்குதிரைக்கு இக்காலம் நடை உண்டு: குறிப்புஉண்டு என்பதன் எதிர்மறையாகிய இன்று என்பது பொய்ம் மையையும்இன்மைப்பண்பினையும் இன்மைக் குறிப்பையும் உணர்த்தும்.எ-டு : முயற்குக் கோடு இன்று: பொய்ம்மைஇக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று : பண்புஇக்குதிரைக்கு ஈண்டு நடை இன்று : குறிப்புஉடைத்து, உடைய என்பன பெரும்பான்மையும் உறுப்பின் கிழமையும்பிறிதின்கிழமையும் பற்றி வரும்.எ-டு : யானை கோடு உடைத்து: உறுப்பின் கிழமை – பண்பு; மேரு சேர்காகம் பொன்னிறம் உடைத்து: குறிப்பு (பிறிதின்கிழமை); குருதிபடிந்துண்ட காகம் குக்கிற் புறம் உடைத்து, உடைய: (களவழி.5); (பிறிதின்கிழமை); ‘அறிந்த மாக்கட்டு’ (அகநா. 15), ‘குறை கூறும் செம்மற்று’(கலி.40), உயர்ந்ததாதல் மேற்று, வைகற்று, ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா.173) – இவை பிறிதின் கிழமையாகிய உடைமைப்பொருள் பட வந்தன.வடாஅது, தெனாஅது – ஏழன் பொருள்பட வந்தன.மூவாட்டையது, செலவிற்று என்பன காலமும் தொழிலும் பற்றி வந்தன.பண்புகொள் கிளவி – கரிது, கரிய முதலியன.பண்பினாகிய சினைமுதற்கிளவி – வெண்கோட்டது, வெண் கோட்டன;நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய.ஒப்பொடு வரூஉம் கிளவி – பொன்னன்னது, பொன்னன்னஇவையன்றி, நன்று தீது நல்ல தீய முதலியனவும் கொள்ளப் படும். (‘எவன்’என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவாய குறிப்பு வினைமுற்று.) (தொ. சொல்.222 நச். உரை.)இன்று என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடின்று என்பது. இலஎன்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வெருது கோடில என்பது. கோட்டினது இன்மைமுதற்கு ஏற்றிக் கூறும்வழி இவ்வாறாம். இனி அக்கோடுதனக்கே இன்மைகூறும்வழி இவ்வெருத்திற்குக் கோடின்று – என ஒரு பொருள்முதல்கூறி-யானும், இவ்விடத்துக் கோடின்று – என ஓரிடம் கூறியானும்,இக்காலத்துக் கோடின்று என ஒரு காலம் கூறியானும் வரும். (தொல். சொல்.222 கல். உரை)